விளையாட்டு

லக்னோ அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரிஷப் பந்த் விலகல்.. காரணம் என்ன?

லக்னோ அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரிஷப் பந்த் விலகியுள்ளார்.

லக்னோ அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரிஷப் பந்த் விலகல்.. காரணம் என்ன?
Rishabh Pant
ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மோசமான தோல்விகளைச் சந்தித்ததைத் தொடர்ந்து, அந்த அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரிஷப் பந்த் உடனடியாக விலகியுள்ளார். அவரது இந்த வேண்டுகோளை லக்னோ நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 2025 ஐபிஎல் ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் ரூ.27 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு ரிஷப் பந்த் வாங்கப்பட்டார். ஆனால், அவர் கேப்டனாக இருந்த இந்த இரண்டு சீசன்களிலும் லக்னோ அணியால் பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியவில்லை. குறிப்பாக, நடந்து முடிந்த 2026 சீசனில் 14 போட்டிகளில் விளையாடிய லக்னோ அணி, வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது. இதற்கு முந்தைய 2025 சீசனிலும் 14 போட்டிகளில் 6 வெற்றிகளை மட்டுமே அந்த அணி பெற்றிருந்தது. ஒட்டுமொத்தமாக லக்னோ அணியின் கேப்டனாக பந்த் வழிநடத்திய 28 போட்டிகளில், அந்த அணி 10 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.

சரிவைச் சந்தித்த பேட்டிங் ஃபார்ம்

கேப்டன்சி அழுத்தத்தினால் ரிஷப் பந்த்தின் பேட்டிங் ஃபார்மும் இந்த இரண்டு ஆண்டுகளில் பெரும் சரிவைச் சந்தித்தது. 2025-இல் 14 போட்டிகளில் 269 ரன்களும், இந்த ஆண்டு (2026) 312 ரன்களும் மட்டுமே அவராலெடுக்க முடிந்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக 2024 சீசனில் 446 ரன்கள் குவித்திருந்த பந்த், லக்னோ அணிக்காக விளையாடிய 28 போட்டிகளில் 26.4 சராசரியுடன் 581 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்; இதில் ஒரு சதமும் இரண்டு அரைசதங்களும் அடங்கும். லக்னோ அணியின் இந்த மோசமான நிலையை அடுத்து கேப்டன் மாற்றத்தைக் கணித்திருந்த அணியின் நிர்வாகியான டாம் மூடி, பந்த்தின் முடிவை மதிப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், டிரஸ்ஸிங் ரூமிற்கு பந்த் வழங்கிய பங்களிப்பிற்கு நன்றி தெரிவித்துள்ள அவர், இனி அணியை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய கேப்டன் தேடல்

ரிஷப் பந்த் விலகியுள்ளதால் லக்னோ அணி நிர்வாகம் தற்போது புதிய கேப்டனைத் தேடும் பணியில் இறங்கியுள்ளது. அந்த அணியில் ஏற்கனவே சர்வதேச அளவில் தங்களது நாட்டு அணிகளை வழிநடத்திய அனுபவம் கொண்ட மிட்செல் மார்ஷ், எய்டன் மார்க்ரம் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் உள்ளதால், இவர்களில் ஒருவர் புதிய கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.