விளையாட்டு

சிஎஸ்கே அணியிலிருந்து விலகினார் ஸ்டீபன் பிளெமிங்.. அடுத்த தலைமை பயிற்சியாளர் யார்?

சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார் ஸ்டீபன் பிளெமிங்.

சிஎஸ்கே அணியிலிருந்து விலகினார் ஸ்டீபன் பிளெமிங்.. அடுத்த தலைமை பயிற்சியாளர் யார்?
Stephen Fleming
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அதன் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கும் தங்களது 17 ஆண்டுகாலப் பயணத்தை பரஸ்பர சம்மதத்துடன் முடித்துக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஐபிஎல் தொடரின் தொடக்க ஆண்டான 2008-இல் சிஎஸ்கே அணியில் வீரராக இணைந்த நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளெமிங், 2009-ஆம் ஆண்டு அந்த அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்றார். சிஎஸ்கே அணி கடைசியாக 2023-இல் கோப்பையை வென்றது. எனினும், கடந்த 2024, 2025 மற்றும் 2026 ஆகிய தொடர்ச்சியான மூன்று ஐபிஎல் சீசன்களில் சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறியது. இந்தத் தொடர் சரிவுகள் காரணமாகப் பிளெமிங்கின் பதவி குறித்துக் கேள்விகள் எழுந்த நிலையில், தற்போது இருதரப்பும் சுமுகமாகப் பேசி இந்தப் பிரிவை முடிவெடுத்துள்ளன.

பிளெமிங்கின் 17 ஆண்டுகாலப் பயிற்சியின் கீழ், சிஎஸ்கே அணி 5 முறை ஐபிஎல் கோப்பைகளையும், 2 முறை சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்று சாதனை படைத்தது. மேலும், சாதனை அளவாக 12 முறை பிளே-ஆஃப் சுற்றுகளுக்கும், 10 முறை இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்று அசத்தியது.

பிளெமிங்கின் இந்த நீண்ட காலப் பங்களிப்பிற்குச் சிஎஸ்கே உரிமையாளர் ரூபா குருநாத் மற்றும் நிர்வாக இயக்குநர் கே.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர். சிஎஸ்கே அணியின் தனித்துவமான அடையாளத்தையும், வீரர்களின் திறமையையும் வெளிக்கொண்டு வந்ததில் பிளெமிங்கிற்கு மிக முக்கியப் பங்கு உண்டு என அவர்கள் பாராட்டியுள்ளனர்.

தனது விலகல் குறித்துப் ஸ்டீபன் பிளெமிங், "விளையாட்டுத் துறையில் 18 ஆண்டுகள் என்பது ஒரு வாழ்நாள் போன்றது. சிஎஸ்கே அணியுடன் பயணித்தது எனது பயிற்றுவிப்பாளர் வாழ்க்கையில் கிடைத்த பெருமையாகும். நாங்கள் ஒன்றாகப் பல மறக்க முடியாத வெற்றிகளைக் கொண்டாடியுள்ளோம், கடினமான தருணங்களைக் கடந்துள்ளோம். சிஎஸ்கே எப்போதும் எனது இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சிஎஸ்கே அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் யார் என்று கேள்வி எழுந்த நிலையில், டோனி அப்பதவிக்கு நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.