அரசியல்

இந்தியில் ஊர் பெயர்கள்.. "இதுதான் அவர்கள் சொன்ன மாற்றமா?" மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

இந்தியில் ஊர் பெயர்கள் இடம்பெற்ற விவகாரத்தில், "தமிழ்நாடு அரசே இந்தியை திணிப்பதா?" என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்

இந்தியில் ஊர் பெயர்கள்..
MK Stalin

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டிப் பலகையில் ஊர்களின் பெயர்கள் இந்தியில் எழுதப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில்தான் தமிழ்நாடு அரசு தரப்பில் பல்வேறு வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயர்ப் பலகைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு நேர்மாறாக மாநில அரசின் நெடுஞ்சாலைத் துறையே அமைத்த பலகையில் இந்தி எழுத்துக்கள் இடம்பெற்றிருப்பது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் மத்திய அரசால் இந்தி திணிக்கப்படுவதாகக் கூறி பல்வேறு போராட்டங்கள் அவ்வப்போது நடைபெற்று வந்த சூழலில், தற்போது மாநில அரசே இந்தியில் பெயர்ப்பலகை அமைத்திருப்பது பெரும் சர்ச்சை விவாதமாக மாறியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 'எக்ஸ்' பக்கத்தில் தவெக அரசைக் கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இதுவரை மத்திய அரசின் இந்தித் திணிப்பைத்தான் தமிழ்நாடு எதிர்கொண்டு வந்தது. தற்போது, மாநில அரசே அந்தப் பணியைச் செய்வதுதான் அவர்கள் சொன்ன மாற்றம் போல.

எல்லாவற்றிலும், ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு கிளம்பியதும் 'U Turn' அடிக்கும் த.வெ.க. அரசின் மற்றுமொரு முயற்சியா இது? வடமாநில influencer-களுக்காக ரீல்ஸ் ஆட்சி நடத்தும் த.வெ.க. அரசு இதன் ஆபத்தை உணர்ந்து, உடனடியாகத் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறேன்.

இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டின் உயிர்க்கொள்கை. அதில் விளையாட வேண்டாம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.