அரசியல்

3 அமைச்சர்கள்.. 5 கோஷ்டிகள்.. த.வெ.க. தடாலடி அரசியலால் தடதடக்கும் நாமக்கல்!

நாமக்கல் மாவட்டத்தில் த.வெ.க. அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களிடையே நிலவும் கடும் கோஷ்டி பூசலால், யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் முட்டை மாவட்ட கட்சி நிர்வாகிகள் கடும் குழப்பத்தில் உள்ளனர்.

3 அமைச்சர்கள்.. 5 கோஷ்டிகள்.. த.வெ.க. தடாலடி அரசியலால் தடதடக்கும் நாமக்கல்!
Namakkal TVK
'நம்ம மாவட்டத்துக்கு மூன்று அமைச்சர்கள்' என்று பெருமைபட்டுக்கொண்டிருந்த நாமக்கல் த.வெ.க. தொண்டர்கள் தற்போது, அமைச்சர்கள் மட்டுமல்லாமல், மாவட்டச் செயலாளர்களும் ஆளுக்கு ஒரு கோஷ்டியாக பிரிந்து மல்லுக்கட்டுவதால் யார் பக்கம் நிற்பது என்பதுதான் முட்டை மாவட்ட த.வெ.க. நிர்வாகிகளின் கலக்கம்!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஆறு தொகுதிகளில் பரமத்தி வேலூர் தவிர மீதமுள்ள ஐந்து தொகுதிகளையும் த.வெ.க. தான் கைப்பற்றியிருக்கிறது. இவற்றில் திருச்செங்கோட்டில் வெற்றிபெற்ற அருண்ராஜ், ராசிபுரம் லோகேஷ் தனபால், குமாரபாளையம் விஜயலட்சுமி ஆகியோர் அமைச்சர்கள் ஆகியிருக்கிறார்கள். இவர்களில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் மட்டுமே நாகரிக அரசியலை முன்னெடுக்கிறார். அதிர்ந்து பேசாத இவரது தன்மையும் தன்னை சந்திக்க வருபவர்களையும் கட்சியினரையும் அரவணைத்து போகும் பண்பும் பலரையும் ஈர்த்துவருகிறது, கூடவே, எதிரணியினரின் பொறாமைகளையும். மூன்று அமைச்சர்கள் தவிர, நாமக்கல் கிழக்கு முன்னாள் மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன், மேற்கு மாவட்டச் செயலாளர் சதீஷ் ஆகியோரின் கோஷ்டிகள் என மொத்தம் ஐந்து கோஷ்டிகளால் நாமக்கல் மாவட்டமே களேபரமாக மாறியிருக்கிறது.

இதுபற்றி நாமக்கல் த.வெ.க. நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். "நாமக்கல் மாவட்டத்துல த.வெ.க. ஜெயிச்ச ஐந்து தொகுதிகள்ல நாமக்கல் திலீப், சேந்தமங்கலம் சந்திரசேகர், ராசிபுரம் லோகேஷ் இவங்க எல்லாம் மாற்றுக்கட்சியிலிருந்து த.வெ.க.வுக்கு திடீர்னு வந்து ஜெயிச்சவங்க, பல வருஷமா இயக்கத்துக்கு உழைச்சவங்க ஒரு பக்கம் இருக்க, செலவு செய்ய ஆள் இல்லைங்கிற கொடுமைக்கு தேர்தல்ல நின்னவர் இப்ப ஜெயிச்சு அமைச்சர் ஆகிட்டாங்க. இதுதான் த.வெக தொண்டர்களின் வருத்தம்.

அருண்ராஜ்கிட்ட என்னதான் அப்போதைய மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் வெளியே நட்பா காட்டிக்கிட்டாலும், அவரோட பதவி போய், அவரோட பொண்ணு கமலி அமைச்சரான பிறகு சில உள்ளடி வேலைகளைப் பார்த்துக்கிட்டுதான் இருக்காரு.

இன்னொரு பக்கம், குமாரபாளையத்துல பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி தனி ராஜ்ஜியம்
நடத்துறாங்க. அதிமுகவிலிருந்து தவெக தாவிய முக்கியப் புள்ளி ஒருத்தர் விஜய் பிறந்தநாளுக்கு போஸ்டர் ஓட்ட அத்தனை போஸ்டர்களையும் விஜயலட்சுமி ஆட்கள் கிழிச்சி எறிஞ்சிட்டாங்க. புதுசா வந்தவங்க பெரிய இடத்துக்கு வந்துடக்கூடாதுன்னு அமைச்சரின் ஆட்களே அட்ராசிட்டி செய்றாங்க.

மேற்கு மாவட்டச் செயலாளர் சதீஷூக்கு தேர்தல்ல போட்டியிடாமல் போயிட்டோமேங்கிற வருத்தம் இருக்கு. நாமக்கல் எம்.எல்.ஏ. திலீப்கூட சேர்ந்து செயல்பாடற மாதிரி வெளியே காட்டிக்கிட்டாலும், உள்ளுக்குள்ள சில விஷயங்கள் அவருக்கு இடிச்சிக்கிட்டுதான் இருக்கு எம்.எல்.ஏ. திலீப் தன்னோர் கன்ட் ரோலில் இருக்கணும்னு சதீஷ் விரும்புறாரு. கூடவே, நானும் ஒரு கோஷ்டியை மெயின்டெய்ன் பண்றாரு.

முன்னாள் மா.செ. செந்தில்நாதனை பெண் விவகாரத்துல பதவியைவிட்டு நீக்கியும் அந்த இடத்துக்கு வேற யாரையும் தலைமை நியமிக்கல. அதனால, செந்தில்நாதனே இப்பவும் மாவட்டச் செயலாளரா வலம் வர்றாரு. தவெக ஆட்சிக்கு வந்ததும் ரெண்டு கார், படைபலம் சூழ வலம் வர்றாரு. அவினாசியில ஜெயிச்ச தன் மகள் கமலிக்கு ராசிபுரத்தில கட் அவுட் வைக்கிறாரு. சொந்தக்காரருக்கு நகரச் செயலாளர் பதவி, தன்னோ பெயின்டிங் கான்ட்ராக்ட்ல வேலை பார்த்தவங்களுக்கு கட்சியில போஸ்டிங்னு புஸ்ஸி ஆனந்த் பேரை மிஸ்யூஸ் செய்யறாரு.

சந்துக்கடை, லாட்டரி, மண் பிசினஸ்னு எல்லாத்துக்குமே இவரே களமிறங்கி விலை பேச, அமைச்சர் லோகேஷ் அதிகாரிகளைக் கூப்பிட்டு செந்தில்நாதன் டீலுக்கு தடை போட்டுட்டாரு அந்த கடுப்புல அமைச்சரும், செந்தில்நாதனும் ஒருத்தருக்கு ஒருத்தர் திட்டிக்கிற அளவுக்கு விஷயம் போயிடுச்சு. அதனால, அமைச்சருக்கு சப்போர்ட் செய்யக்கூடாதுன்னு கட்சிக்காரங்களுக்கு செந்தில்நாதன் கட்டளை போட்டிருக்காரு. இதனாலேயே, அமைச்சர் லோகேஷூக்கு செக் வைக்குறதுக்காகவே அமைச்சர் அருண்ராஜை ராசிபுரத்துக்கு அடிக்கடி கூட்டிட்டு வர்றாரு செந்தில்நாதன். இதுல கடுப்பான அமைச்சர் லோகேஷ், அமைச்சர் அருண்ராஜ் படத்தை ராசிபுரத்துல போடக்கூடாதுன்னு தன் ஆதரவாளர்களுக்கு வாய்மொழி உத்தரவு போட்டிருக்காரு.

சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. சந்திரசேகர்கிட்டயும் செந்தில்நாதன், 'மா. செ என்னை கேட்டுத்தான் நீங்க எதையும் செய்யணும்னு சொல்ல, எம்.எல்.ஏ. சந்திரசேகர் கடுப்பாகி முடியாதுன்னு சொல்ல ரெண்டு பேருக்கும் நடுவுல லடாய் போய்க்கிட்டுருக்கு. புதுசா கட்சிக்கு வர்றவங்கள ரொம்பவே அலட்சியம் செய்யுறாரு செந்தில்நாதன். தன் சாதி மக்களான பட்டியலினத்தவர் மட்டுமே கட்சி பதவியில இருக்கணும்னு நினைக்கிறதால, தி.மு.க. அ.தி.மு.க.விலிருந்து சேர நினைச்ச 1,000 பேர் அப்படியே ஜெர்க் ஆகி நின்னுட்டாங்க இப்படியே இந்த கோஷ்டிகள் வளர்ந்து பலமாச்சுன்னா கட்சிக்குள்ள பல விஷயங்கள்ல பிரச்னைகள் வெடிக்கும்" என்று சொல்லி முடித்தனர்.

இதுபற்றி கேட்க தெடர்பு கொண்டபோது, அமைச்சர்கள் அருண்ராஜ், லோகேஷ், த.வெ.க மேற்கு மா.செ சதீஷ் ஆகியோர் செல்போனை எடுக்காத நிலையில் சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. சந்திரசேகரிடம் பேசினோம். aஅப்படி எல்லாம் இல்லை சார்" என்றார் சுருக்கமாக.

நாமக்கல் கிழக்கு முன்னாள் மா.செ செந்தில் நாதனிடம் பேசியபோது, “கட்சியில 18 வருஷமா இருந்தவருக்கு நகரச் செயலாளர் பதவியைக் கொடுத்தேன். அமைச்சருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை. மாவட்டத்தில எந்த கோஷ்டியும் இல்லை. கவுன்சிலரா இருக்கிறவன் கார் வச்சிருக்கும்போது, நான் வெச்சிருக்கிறது. குத்தமா? எவ்வளவு அன்னதானம் படிப்பு, உதவி செய்யுறோம் அதைப் பத்தி எழுதுங்க. மத்தபடி, இதெல்லாம் எதிர்க்கட்சிக்காரங்க சொல்றது. வேற எந்த பிரச்னையும் இங்க இல்லை சார்" என்றார்.