இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாகவும், இந்தப் பணிகளில் முறைகேடுகள் நடப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, SIR பணிகளை நிறுத்த வேண்டும் என்றும், இதற்குப் பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
உச்ச நீதிமன்றம் நோக்கிப் பேரணி!
இந்த நிலையில், SIR நடவடிக்கைக்கு எதிராக ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று (அக்டோபர் 12) டெல்லியில் பேரணி நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை எதிர்த்து ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு சட்டப் போராட்டமாக மாறியுள்ளது.
தலைமை நீதிபதியைச் சந்திக்க நேரம் கேட்ட ராகுல் காந்தி!
முன்னதாக, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக விவாதிக்க ராகுல் காந்தியும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்தை நேரில் சந்திக்க நேரம் கேட்டிருந்தனர்.
ஆனால், இந்த விவகாரங்கள் ஏற்கெனவே நீதிமன்றத்தில் வழக்குகளாக இருப்பதால், தனிப்பட்ட சந்திப்பில் அவற்றைப் பற்றிப் பேச முடியாது என்று தலைமை நீதிபதி பதில் அளித்தாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், தங்களது கோரிக்கைகளை முறையாக மனுத் தாக்கல் செய்து நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.
நாளை விசாரணைக்கு வரும் SIR வழக்குகள்!
SIR நடவடிக்கை தொடர்பான வழக்குகள் நாளை (அக்டோபர் 13) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளன. இந்தச் சூழலில், ராகுல் காந்தி தாக்கல் செய்துள்ள மனு எப்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக நீதிமன்றம் என்ன கூறப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகள், தேர்தல் ஆணையத்தின் விளக்கம் மற்றும் நீதிமன்றத்தின் முடிவு ஆகியவை இந்த விவகாரத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.
SIR பணிகள் தொடர்பான எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு நீதிமன்றத்தில் என்ன தீர்வு கிடைக்கும் என்பது அடுத்தகட்ட விசாரணைகளுக்குப் பிறகே தெரியவரும்.
LIVE 24 X 7









