இந்தியா

இனி PF பணத்தை UPI மூலம் நொடியில் எடுக்கலாம்: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!

பிஎஃப் தொகையை யுபிஐ செயலி மூலம் நேரடியாகப் பெற்றுக் கொள்ளும் புதிய வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது.

இனி PF பணத்தை UPI மூலம் நொடியில் எடுக்கலாம்: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!
EPFO
ஊழியர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதி (PF) தொகையை யுபிஐ (UPI) செயலி மூலம் நேரடியாகப் பெற்றுக் கொள்ளும் புதிய வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தற்போதுள்ள நடைமுறையில் பிஎஃப் பணத்தை எடுப்பதற்குப் பயனர்களுக்கு 7 முதல் 10 நாட்கள் வரை காலதாமதம் ஏற்படுகிறது. மேலும், 1 லட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகைக்கு மேனுவல் சரிபார்ப்பும், ஆவணங்களில் உள்ள சிறு பிழைகளால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் சூழலும் உள்ளது. இந்த குறைபாடுகளைப் போக்கும் வகையில் 'இபிஎஃப்ஓ 3.0' (EPFO 3.0) என்ற புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், நிறுவனங்களின் (Employer) மேனுவல் அனுமதி தேவையில்லாமல், சில நொடிகளிலேயே பிஎஃப் தொகையை உறுப்பினர்களின் வங்கித் கணக்கிற்கு நேரடியாக மாற்ற முடியும்.

யுபிஐ பிஎஃப் திரும்பப் பெறும் முறை எப்படிச் செயல்படும்?

ஊழியர்கள் "UMANG" செயலி மூலம் தங்களது பிஎஃப் கணக்கில் இருந்து எவ்வளவு தொகையைத் தங்களது வங்கித் கணக்கிற்கு மாற்ற முடியும் என்பதைச் சரிபார்த்துக் கொள்ளலாம். அதன் பிறகு, யுபிஐ பின் (UPI PIN) எண்ணைப் பயன்படுத்தித் தங்களுக்குத் தகுதியான தொகையை உடனடியாக வங்கித் கணக்கிற்கு மாற்றிக் கொள்ளும் வசதி வழங்கப்படவுள்ளது. இந்தத் தொகையை மாற்றியவுடன், பயனர்கள் யுபிஐ வசதி கொண்ட ஏடிஎம் (ATM) மூலமாகவோ அல்லது வழக்கமான யுபிஐ பரிவர்த்தனைகள் மூலமாகவோ தங்களுக்குத் தேவையானபடி பயன்படுத்திக் கொள்ளலாம்.

முக்கிய அம்சங்கள் மற்றும் நிபந்தனைகள்

இந்த புதிய திட்டத்தின் கீழ், அவசரக் கால மருத்துவத் தேவைகள், கல்வி, திருமணம் மற்றும் வீட்டு வசதி போன்ற காரணங்களுக்காக 3 நாட்களுக்குள் பணத்தைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், ஓய்வூதிய சேமிப்பைப் பாதுகாக்கும் நோக்கில், மொத்தப் பணத்தில் 25 சதவீதத் தொகை எப்போதும் பிஎஃப் கணக்கிலேயே லாக் செய்யப்பட்டிருக்கும். மீதமுள்ள 50 முதல் 75 சதவீதத் தொகையை மட்டுமே யுபிஐ அல்லது ஏடிஎம் மூலம் எடுக்க முடியும்.

இந்த வசதியைப் பெற, உறுப்பினர்களின் யுனிவர்சல் கணக்கு எண் (UAN) செயல்பாட்டில் இருக்க வேண்டும். அத்துடன் பான் கார்டு மற்றும் அடையாள அட்டை ஆகியவை யுஏஎன் (UAN) எண்ணுடன் இணைக்கப்பட்டுச் சரிபார்க்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், பிஎஃப் கணக்கில் உள்ள பெயர் மற்றும் பிறந்த தேதி விபரங்கள் அடையாள அட்டையில் உள்ளவாறே துல்லியமாக ஒத்துப்போக வேண்டும்.

வாட்ஸ்அப் சாட்பாட் வசதி

பிஎஃப் தொடர்பான விபரங்களை உறுப்பினர்கள் மிக எளிதாகத் தெரிந்துகொள்ளும் பொருட்டு, இந்த புதிய சிஸ்டம் வாட்ஸ்அப் சாட்பாட் (WhatsApp Chatbot) வசதியுடன் இணைக்கப்படவுள்ளது. இதன் மூலம் பயனர்கள் ஒரு சாதாரண வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்புவதன் மூலமாகவே தங்களது கணக்கு இருப்பு மற்றும் பணம் எடுப்பதற்கான தகுதி விபரங்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும்.