இந்தியா

"அரசுக்கு எதிராக போராடினால் இப்படி தான் செய்வீர்களா?" காவல்துறையை விளாசிய உயர் நீதிமன்றம்!

மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Mumbai Highcourt
மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது மட்டுமே ஒருவரை நகரை விட்டு வெளியேற்றுவதற்கு போதிய காரணமாக அமையாது என்று கூறி, மும்பை போலீசாரின் உத்தரவை அம்மாநில உயர் நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

சோசியலிஸ்ட் டெமோக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) அமைப்பின் பொதுச் செயலாளரான சயீத் அகமது அப்துல் வாஹித் சவுத்ரி (49), கடந்த 2019 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் சிஏஏ (CAA), என்ஆர்சி (NRC), ஞானவாபி விவகாரம் மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். இதன் காரணமாக அவர் மீது 5 வழக்குகள் பதியப்பட்டன. இந்த வழக்குகளை அடிப்படையாகக் கொண்டு, கடந்த 2025 டிசம்பரில் செம்பூர் துணை போலீஸ் கமிஷனர் சயீத்தை மும்பை மாநகரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளிலிருந்து வெளியேற உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சயீத் உயர் நீதிமன்றத்தை நாடினார்.

மனுவை விசாரித்த நீதிபதி மாதவ் ஜாம்தார், "ஆளும் பாஜக அரசுக்கு எதிராகவும், அமித் ஷாவுக்கு எதிராகவும் கோஷமிட்டதற்காக ஒருவரை எப்படி அவரது சொந்த நகரை விட்டு வெளியேறும்படி உத்தரவிட முடியும்?" என்று கேள்வி எழுப்பினார். மேலும், "காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்குப் கடமைப்பட்டவர்களே தவிர, அரசியல் தலைவர்களின் ஊழியர்கள் அல்ல. அரசின் முடிவுகளுக்கு எதிராக அமைதியான முறையில் போராடவும், கோஷமிடவும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியல் சாசன ரீதியான அடிப்படை உரிமை உள்ளது" என்று நீதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மும்பை மாநகராட்சித் தேர்தல் நெருங்கும் வேளையில், தங்களின் ஜனநாயக ரீதியான குரலை ஒடுக்குவதற்காகவே இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகச் சயீத் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை முழுமையாக ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இந்த வெளியேற்ற உத்தரவு தவறான உள்நோக்கம் கொண்டது மற்றும் சட்ட விரோதமானது என்று குறிப்பிட்டது. இத்தகைய செயல்கள் அரசியல் சாசனத்தின் பிரிவு 19 மற்றும் 21 வழங்கும் வாழும் உரிமையைப் பறிப்பதாகக் கூறி, சயீத்தை மும்பையிலிருந்து வெளியேறக் கோரி பிறப்பிக்கப்பட்ட போலீசாரின் உத்தரவை உயர் நீதிமன்றம் முழுமையாக ரத்து செய்து தீர்ப்பளித்தது.