இந்தியா

பனியன், டவுசருடன் வலம் வந்த எம் எல்.ஏ.. வைரல் வீடியோவால் வெடித்த சர்ச்சை!

டெல்லியில் ஆம்ஆத்மி எம்எல்ஏ பனியன், டவுசருடன் பொதுமக்களின் விண்ணப்ப படிவங்களில் கையெழுத்திடும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

பனியன், டவுசருடன் வலம் வந்த எம் எல்.ஏ.. வைரல் வீடியோவால் வெடித்த சர்ச்சை!
Aam Aadmi MLA
வடமேற்கு டெல்லியின் கிராரி தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ அனில் ஜா வாட்ஸ், பனியன் மற்றும் டவுசர் அணிந்தபடி மக்களுக்கு விண்ணப்பங்களில் கையெழுத்திட்டுத் தரும் வீடியோ வெளியாகிச் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் டெல்லி அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்திற்கு டெல்லி முதல்வர் ரேகா குப்தா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-வின் இந்தச் செயல்பாடு முற்றிலும் வெட்கக்கேடானது என்று சாடிய அவர், பெண்கள் உட்படப் பொதுமக்கள் கையெழுத்து வாங்குவதற்காக வரும்போது பிரதிநிதிகள் முறையான ஆடைகளை அணிந்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

மேலும், இதுபோன்ற பொறுப்பற்ற நடத்தையை ஏற்க முடியாது என்றும், அவரது சட்டமன்ற உறுப்பினர் தகுதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள எம்.எல்.ஏ அனில் ஜா, தாம் ஏதேனும் தவறான முறையில் நடந்துகொண்டதாகக் கருதினால் அதற்கான ஆதாரக் காட்சிகளை வெளியிட வேண்டும் எனச் சவால் விடுத்துள்ளார்.

பொதுமக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாத காரணத்தினாலேயே, முதல்வர் ரேகா குப்தா தன் மீது இதுபோன்ற வீண் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.