இந்தியா

4 ஆண்டுகளாக FREEZER-ல் வைக்கப்பட்ட முதியவரின் உடல்.. அதிர்ச்சியில் உறைந்த போலீசார்!

மும்பையில் ஒரு குடும்பத்தினர் 80 வயது முதியவரின் உடலை கடந்த 4 ஆண்டுகளாகப் ரகசியமாகப் பாதுகாத்து வந்த விசித்திர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4 ஆண்டுகளாக FREEZER-ல் வைக்கப்பட்ட முதியவரின் உடல்.. அதிர்ச்சியில் உறைந்த போலீசார்!
Mumbai
எதிர்கால மருத்துவத் தொழில் நுட்பத்தின் மூலம் இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையில், 80 வயது முதியவர் ஒருவரின் உடலை கடந்த 4 ஆண்டுகளாகப் ரகசியமாகப் பாதுகாத்து வந்த விசித்திர சம்பவம் மும்பையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ரகசியமாக வைக்கப்பட்ட உடல்

மும்பையின் மாலாடு பகுதியில் உள்ள ஒரு உள்ளூர் மருத்துவச் சிகிச்சை மையத்தில் முதியவர் ஒருவரின் உடல் 4 ஆண்டுகளாகப் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளதாகப் போலீசாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்ட காவல்துறையினர், அங்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்த 80 வயது முதியவரின் உடல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

விசாரணையில், முதியவர் இறந்தது முதல் அவரது குடும்பத்தினர் கடுமையான மன உளைச்சலில் இருந்துள்ளதும், அமெரிக்காவில் உள்ள ‘கிரையோனிக்ஸ்’ (Cryonics) மையத்திற்கு அவரது உடலை மாற்றி, எதிர்காலத்தில் மீண்டும் உயிர்ப்பிக்கும் எண்ணத்தோடு மருத்துவமனையிடம் கொடுத்து உடலைப் பாதுகாக்கக் கூறியதும் தெரியவந்தது.

என்ன இந்த ‘கிரையோனிக்ஸ்’ தொழில் நுட்பம்?

செல்கள் மற்றும் திசுக்களை உறைநிலையில் பாதுகாக்கும் முறைகள் மருத்துவ உலகில் வழக்கத்தில் இருந்தாலும், மனித உடலை முழுமையாக உறைநிலையில் வைக்கும் ‘கிரையோனிக்ஸ்’ முறை இன்னும் பரிசோதனை நிலையிலேயே உள்ளது. இறப்பிற்குப் பிறகு உடலை மிகக் குறைந்த வெப்பநிலையில் உறைநிலையில் வைத்துப் பாதுகாப்பதன் மூலம், எதிர்காலத்தில் மருத்துவ அறிவியல் வளர்ச்சியடையும் போது அவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்பதே இதன் பின்னணியில் உள்ள கோட்பாடாகும்.

இந்தியச் சட்டத்தில் இதற்கு அனுமதியா?

இந்திய அரசியலமைப்பு மற்றும் சட்டங்களின்படி மனித உடலை உறைநிலையில் நீண்ட காலம் பாதுகாப்பதற்கு நேரடித் தடையும் இல்லை; அதேநேரத்தில் அதற்கான தனி சட்டப்பூர்வ அனுமதியும் இல்லை. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21-ன் கீழ், வாழும் உரிமையைப் போலவே இறந்த நபரின் உடலையும் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பதே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பாக உள்ளது.

முன்னதாக, 2014-ல் காலமான ஆன்மீகத் தலைவர் அசுதோஷ் மகாராஜின் உடலைப் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் ஃப்ரீசரில் பாதுகாக்க அனுமதித்திருந்தது. ஆனால், அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல் தனியார் இடத்தில் உடலை மறைத்து வைப்பது சட்டரீதியான கேள்விகளை எழுப்பியுள்ளது.

தொடரும் போலீஸ் விசாரணை

கடந்த 4 ஆண்டுகளாக உடலை மையத்தில் வைத்திருந்தது குறித்துக் குடும்பத்தினரோ அல்லது மருத்துவ நிர்வாகமோ காவல் துறைக்குத் தெரிவிக்கவில்லை. இதன் பின்னணியில் வேறு ஏதேனும் குற்றச் செயல்கள் அல்லது நிதி முறைகேடுகள் உள்ளதா என்பது குறித்தும், சட்டப்பூர்வமாக உடலை எப்படி அடக்கம் செய்வது அல்லது அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்தும் காவல் துறையினர் தீவிரமாகச் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகின்றனர்.