அசாம் மாநிலம் காசிரங்கா பகுதியில் கன்டெய்னர் லாரியும் மினி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் எனக் கூறப்படுவதால் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
நேருக்கு நேர் மோதிய லாரி - மினி பேருந்து!
அசாம் மாநிலம் காசிரங்கா பகுதியில் வெள்ளிக்கிழமை காலை இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. போகாகாட் பகுதியில் இருந்து நாகாவோன் நோக்கி மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு மினி பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த கன்டெய்னர் லாரியுடன் மினி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்ததால் மினி பேருந்து உருக்குலைந்து போனது. பேருந்தில் பயணம் செய்த பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதனால் சம்பவ இடத்திலேயே பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
23 பேர் உயிரிழப்பு - தொடரும் மீட்புப் பணிகள்!
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்கள் மற்றும் காவல்துறையினர் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பேருந்துக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.
காயமடைந்தவர்கள் உடனடியாக கோஹோரா மாதிரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்தவர்கள் ஜோர்ஹாட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனிடையே, விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகளை ஆய்வு செய்த கோலாகாட் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்வப்னநீல் தேகா, விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், பேருந்துக்குள் இருந்து தொடர்ந்து உடல்கள் மீட்கப்பட்டு வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறினார். பேருந்தில் மொத்தம் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்பது குறித்த தகவலும் உடனடியாக தெரியவில்லை என தெரிவித்தார்.
அதிவேகத்தில் சென்ற பேருந்து - போலீசார் விசாரணை!
இந்த விபத்துக்கு மினி பேருந்தின் அதிவேக பயணமே காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
காசிரங்கா தேசிய பூங்கா அருகே விதிக்கப்பட்டிருந்த வேகக் கட்டுப்பாடுகளை மீறி பேருந்து அதிவேகமாக சென்றதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த கன்டெய்னர் லாரியுடன் மோதியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், விபத்துக்குள்ளான பேருந்து 'டிராவலர்' வகையைச் சேர்ந்தது என்றும், அந்த வாகனத்திற்கு ஏற்கனவே ரூ.38,500 அபராதம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ரூ.4,000 அபராதம் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. வணிக வாகனங்களுக்கான அதிவேக பயண அபராதமாக இந்த தொகை விதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்தில் அமைச்சர் - முதலமைச்சர் இரங்கல்!
விபத்து நடந்த இடத்திற்கு அசாம் மாநில பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அதுல் போரா நேரில் சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை பார்வையிட்டார். இவர் அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.
இதனிடையே, அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த அவர், இந்த துயரமான நேரத்தில் அசாம் மாநில மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் துணை நிற்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காயமடைந்தவர்களுக்கு தாமதமின்றி சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்குவதே அரசின் உடனடி முன்னுரிமை என்றும் தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்த இடத்தில் அமைச்சர் அதுல் போரா நேரடியாக நிவாரணப் பணிகளை கண்காணித்து வருவதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இந்த துயரத்தில் இருந்து மீண்டு வரவும் இறைவனை பிரார்த்திப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் உள்ளிட்ட 23 பேர் உயிரிழந்துள்ள இந்த கோர விபத்து அசாம் மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த இறுதி விவரங்கள் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
LIVE 24 X 7









