காசாவில் தாக்குதல் நடத்த தயாராக உள்ள இஸ்ரேல் படை.. ஷாக் கொடுத்த நெதன்யாகு
காசா பகுதியில் எந்த நேரத்திலும் மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் படை தயாராக இருக்கிறது என்றும் ஹமாஸின் பெரும்பாலான படைகளை காசாவில் நாங்கள் ஒழித்துவிட்டோம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமான இஸ்ரேலியர்கள் உயிரிழந்த நிலையில் 250-க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளாக சிறைப்பிடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் பழிவாங்கும் நோக்கில் ஹமாஸ் அமைப்பை குறிவைத்து காசா மீது தாக்குதல் நடத்தியது. இதில் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
15 மாதங்களுக்கு மேலாக நீடித்த இஸ்ரேல்- காசா போரை நிறுத்துவதற்காக அமெரிக்கா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வந்தன. ஆனால், இவை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து, அண்மையில் பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாகவும், போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாகவும் இஸ்ரேல் அளித்த வரைவு ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் அமைப்பினர் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இதன் காரணமாக 15 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த இஸ்ரேல்– காசா இடையிலான போர் முடிவுக்கு வந்தது. இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் இயக்கத்தினர் தங்கள் பிடியில் உள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுதலை செய்து வருகிறது. இதற்கு இணையாக இஸ்ரேல் தங்கள் பிடியில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்து வருகிறது. இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக ஹமாஸும், இஸ்ரேலும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
பாலஸ்தீன கைதிகள் 620 பேரை இஸ்ரேல் விடுதலை செய்யாததால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறிவிட்டதாக ஹமாஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்யாதவரை இஸ்ரேலுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதில்லை என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், காசா பகுதியில் எந்த நேரத்திலும் மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் படை தயாராக இருக்கிறது என்றும் ஹமாஸின் பெரும்பாலான படைகளை காசாவில் நாங்கள் ஒழித்துவிட்டோம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், பேச்சுவார்த்தை மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ போரின் நோக்கத்தை நிறைவேற்ற தயாராக இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.
What's Your Reaction?






