விளையாட்டு

தென்னாப்ரிக்கா vs ஆஸ்திரேலியா போட்டி.. மழையால் ரத்து.. ரசிகர்கள் சோகம்

தென்னாப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதவிருந்த நிலையில் ராவல்பிண்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது.

தென்னாப்ரிக்கா vs ஆஸ்திரேலியா போட்டி.. மழையால் ரத்து.. ரசிகர்கள் சோகம்
தென்னாப்ரிக்கா vs ஆஸ்திரேலியா போட்டி மழையால் ரத்து

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் கடந்த  19-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இதுவரை ஆறு லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. ஆறு போட்டிகளின் முடிவில் குரூப் ஏ பிரிவிலிருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிப் பெற்ற நிலையில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் தொடரிலிருந்து வெளியேறி அதிர்ச்சியைக் ஏற்படுத்தியது.

இந்நிலையில் 7-வது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் தென்னாப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று (பிப். 25) மோதவிருந்தன. ஏற்கனவே இரு அணிகளும் தாங்கள் விளையாடிய முதல் போட்டியில் வெற்றி பெற்றுவிட்டது. இதனால் இன்றைய ஆட்டத்தில் யார் வெற்றி பெற்று அரையிறுதிக்கு செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருந்தது. 

ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக ராவல்பிண்டியில் மழை குறுக்கிட்டதால் டாஸ் போட முடியாமல் ஆட்டம் தள்ளிப் போனது. மழை நின்றதும் போட்டியை நடத்தலாம் என காத்திருந்த அம்பயர்கள் கடைசி வாய்ப்பாக போட்டியை 20 ஓவர் ஆட்டமாக நடத்த திட்டமிட்டனர். ஆனால், கடைசிவரை மழை குறையாததால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் இரண்டு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டதால் குரூப் பி பிரிவில் 4 அணிகளுக்குமே அரையிறுதிக்கு தகுதிபெற ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது. முன்னதாக விளையாடிய ஒரு  போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தோற்ற நிலையில், மீதமிருக்கும் 2 போட்டிகளை வென்றால் அவ்விரு அணிகளும் அரையிறுதிக்குத் தகுதிபெறும். எனவே, நாளை இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவிருக்கும் நிலையில், அப்போட்டி இரு அணிக்குமே முக்கியமான போட்டியாக எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 244 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில், விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் தனது 51 சதத்தை பதிவு செய்து வரலாற்று சாதனை படைத்தார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி 51-வது சதம் அடித்ததன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் சமன் செய்தார். இதேபோல், ஹர்த்திக் பாண்டியா சர்வதேச போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய மைல்கல்லை எட்டியது குறிப்பிடத்தக்கது.