ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் மனு தாக்கல்
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும், பாடகி சைந்தவியும் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்தனர்.

கடந்த 2006-ஆம் ஆண்டு வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான ‘வெயில்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ் தனது முதல் படத்திலேயே தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்த இவர் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகர், பாடகர் என்ற பன்முகத் தன்மையோடு உலா வருகிறார்.
தனது திறமையால் குறுகிய காலத்திலேயே முன்னணி இசையமைப்பாளர் என்ற நிலையை அடைந்தார். ஜி.வி.பிரகாஷின் இசைக்கு கிடைத்த அங்கீகாரம் அவரது நடிப்பிற்கு பெரிய அளவில் கிடைக்கவில்லை என்றே கூறலாம். இவர் நடித்த ‘சர்வம் தாளமயம்’, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’, ‘பேச்சுலர்’ போன்ற குறிப்பிட்ட ஒரு சில படங்கள் மட்டுமே வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
திருமணம்
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கடந்த 2013-ஆம் ஆண்டு தனது பள்ளித் தோழியும், தமிழ் சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு அன்வி என்ற மகள் உள்ளார். பெரும்பாலும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் படங்களில் சைந்தவி குரலில் கண்டிப்பாக ஒரு பாடலாவது இடம்பெற்றிருக்கும்.
மேலும், ஜி.வி.பிரகாஷும், சைந்தவியும் இணைந்து பல பாடல்களையும் பாடியுள்ளனர். அதிலும், ‘மயக்கம் என்ன’ திரைப்படத்தில் இருவரும் இணைந்து பாடியிருக்கும் ‘பிறைத்தேடும் இரவிலே உயிரே’ பாடல் சூப்பர் ஹிட்டானது மட்டுமல்லாமல் இன்று வரை ரசிகர்கள் முணுமுணுக்கும் பாடலாக அமைந்துள்ளது. இவ்வாறு இருவரும் பிரபல ஜோடியாக வலம் வந்தனர்.
விவாகரத்து
கடந்த 12 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த இருவரும் தங்களது குடும்பத்தாருக்கு இடையே எழுந்த பிரச்சனையால் ஏற்கனவே சில ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் சமீபத்தில் ஜி.வி.பிரகாஷும், சைந்தவியும் தாங்கள் பிரிந்து வாழப்போவதாக தெரிவித்தனர். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி இன்று மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜி.வி.பிரகாஷ், சைந்தவி இருவரும் நேரில் ஆஜராகி தாங்கள் பிரிவதாக தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இருவரும் ஒரே காரில் புறப்பட்டு சென்றனர்.
What's Your Reaction?






