சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநர் அலுவலகத்தில் மாநில அளவிலான அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்கள், மாநகராட்சி நல அலுவலர்கள் கூட்டமானது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார், தேசிய சுகாதார இயக்க பணி இயக்குநர் அருண் தம்புராஜ், பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குநர் செல்வவிநாயகம் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, “அனைத்து அரசு பொது மருத்துவமனைகளிலும் வெப்ப தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கான சிறப்பு வார்டுகள், படுக்கைகளின் எண்ணிக்கைகளை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சி அடுத்த 15 நாட்களில் தொடங்க உள்ளது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறும், தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களின் நலனுக்காக முன்கூட்டியே தொடங்கப்பட உள்ளது.
கோடை வெப்பத்தை முன்னிட்டும், தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையை கருத்தில் கொண்டும் சிறுவர்கள், முதியவர்கள், பொதுமக்கள் போன்றோர் எவ்வாறு தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்ற துண்டு பிரசுரங்கள் வாயிலாகவும் , நிகழ்ச்சி வாயிலாகவும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி சுகாதாரத்துறை சார்பில் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் மேலும் 50 ஆரம்ப சுகாதார நிலையம் இந்த மாதம் இறுதிக்குள் திறக்கப்பட உள்ளது. மேலும் கூடுதலாக 50 ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் எனவும், 500 துணை சுகாதார நிலையம் தமிழ்நாட்டிற்கு புதிதாக வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளோம்.
பொது மக்களிடையே முதல்வர் மருந்தகம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. அனைத்து மருந்து வகைகளும் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. உதாரணமாக நீரழிவு மருந்துகள் முதல்வர் மருந்தகங்களில் 11 ரூபாய்க்கும் , மத்திய அரசு நடத்தும் மருந்தகங்களில் 30 ரூபாய்க்கும், தனியார் மருந்தகங்களில் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.