பள்ளிகளில் தொடரும் சோகம்.. 9 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர்..

சிறுமுகை அரசு பள்ளியில் 7, 8, 9ஆம் வகுப்பு பயிலும் 9 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Aug 22, 2024 - 07:34
Aug 22, 2024 - 07:42
 0
பள்ளிகளில் தொடரும் சோகம்.. 9 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர்..
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் கைது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள ஆலாங்கொம்பு அரசு பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம், குழந்தைகள் உதவி மையம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். 

அப்போது, அப்பள்ளியில் 7, 8, 9ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவிகள் 9 பேர், தங்களிடம் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் நடராஜன் (54) என்பவர் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்ததாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இது குறித்து வகுப்பு ஆசிரியரான கீதா மற்றும் ஷியாமளா உள்ளிட்டோரிடம் அப்போதே தெரிவித்ததாகவும், அதனை அறிந்தும் பள்ளியின் தலைமை ஆசிரியை ஜமுனா, பட்டதாரி ஆசிரியை சண்முக வடிவு உள்ளிட்டோர் கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்ஷா கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோமதி, உதவி ஆய்வாளர் ரபீனா மரியம் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில் அப்பள்ளியில் பயிலும் 7, 8, 9ஆம் வகுப்பு மாணவிகள் 9 பேரிடம் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் நடராஜன் பாலியல் தொந்தரவு செய்ததும், இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை ஜமுனா, ஆசிரியைகள் சண்முக வடிவு, கீதா, ஷியாமளா உள்ளிட்டோர் இச்சம்பவத்தை போலீசாருக்கும், மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்காமல் இருந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து பள்ளி மாணவிகள் 9 பேரை பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் நடராஜன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜமுனா,ஆசிரியைகள் கீதா, ஷியாமளா, சண்முகவடிவு உள்ளிட்டோருக்கு சம்மனும் அனுப்பப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்புதான், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியை சேர்ந்த மாணவிகளுக்கு, அந்தப் பள்ளியில் என்.சி.சி. முகாம் நடத்திய சிவராமன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பரபரப்பு புகார் எழுந்து, 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உரிய சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நியாயமான விசாரணையை உறுதி செய்யுமாறு சென்னை டிஜிபிக்கு ஆணையம் உத்தரவிட்டது. மேலும், 3 நாட்களுக்குள் காவல்துறை மற்றும் மாநில அரசிடம் இருந்து விரிவான நடவடிக்கை அறிக்கை கோரப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் பள்ளி மாணவிகளுக்கு, இடைநிலை ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக, மாணவ, மாணவிகளுக்கு அறிவுக்கண்ணை திறப்பதோடு, பாதுகாப்பு அரணாகவும் திகழவேண்டிய ஆசிரியர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துவருவது கவலை அளிப்பதாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow