நடிகர் விஜய் தன்னுடைய விஜய் மக்கள் இயக்கத்தை கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியாக அறிவித்தார். தொடர்ந்து மார்ச் 7ஆம் தேதி முதன்மை கழக நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு வெளியானது. அதற்கு மறுநாளே, கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை அறிமுகம் செய்தார்.
கட்சியாக அறிவித்ததை தொடர்ந்து கட்சியின் கொடியை அறிமுகம் செய்யும் விழா இன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூர் 8வது அவென்யுவில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தன் கையால் 33 அடி உயற கொடி கம்பத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை ஏற்றி அறிமுகம் செய்ய உள்ளார்.
அதற்கான பணிகள் தற்போது தீவிரமாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் கொடி அறிமுக விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ள 8 அணிகளின் தலைவர்கள் என 500 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
சுமார் 500 பேர் அமர்வதற்கு நாற்காலிகள் போடப்பட்டு உள்ளது. சரியாக 9 மணியில் இருந்து 9.30 மணிக்குள் நடிகரும், தவெக தலைவருமான விஜய் 33 அடி உயர கட்சி கொடி கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்ற உள்ளார். தொடர்ந்து தவெக தலைவருமான விஜய் கொடி ஏற்றும் போது தாவேக நிர்வாகிகள் பார்ப்பதற்கு LED டிவி அமைக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, மற்றும் கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் நிர்வாகிகள் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொடி அறிமுக விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் காலையில் டிஃபன், மதியம் சைவ உணவும் வழங்க திட்டமிடப்ப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் விஜய் இல்லம் அமைந்துள்ள நீலாங்கரை கேஷ்சுரீனா டிரைவ் சாலையில் வழக்கமாக நடைப்பயிற்சி மேற்கொள்ளும் நபர்களை கூட காவல்துறையின் அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு இடத்தில் கூட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பதாகைகளோ சுவரொட்டிகளோ எதுவும் காணப்படவில்லை.
இதனால், கட்சிக்கொடி ஏற்றும் விழாவில் நடிகர் விஜய் கட்சிக்கு காவல்துறை கெடுபிடியாக நடந்துகொள்வதாக, விஜய்யின் ரசிகர்களும், தொண்டர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். அதே நேரத்தில், பொது இடங்களில் விஜய் கட்சி கொடியை ஏற்ற கட்சியினர் அனுமதி பெற்றுள்ளனரா? காவல்துறை அனுமதிக்குமா? போன்ற கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றது.