TVK Vijay: விஜய்யின் தவெக கொடி.. யானை தான் இப்ப பிரச்சினையா..? இயக்குநர் அமீர் தக் லைஃப்!
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இருப்பது, ஆப்பிரிக்க யானையா அல்லது இறக்குமதி செய்யப்பட்ட யானையா என்பது குறித்து இயக்குநர் அமீர் தக் லைஃப் பதில் கொடுத்துள்ளார்.

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள விஜய், அதன் கொடியை கடந்த வாரம் அறிமுகம் செய்திருந்தார். கொடிப் பாடலையும் விஜய் கடந்த வாரம் அறிமுகம் செய்தார். சென்னை பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், விஜய்யின் அப்பா, அம்மா, கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றிருந்தனர். சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே விஜய் அரசியலுக்கு வருவது பலரிடன் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், அவருக்கு இதெல்லாம் தேவையில்லாத வேலை என விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.
இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் விஜய் தனது கொடியை அறிமுகம் செய்தார். இதனையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்தனர். அதேநேரம் தவெக கொடியில் இருந்த யானைகள், வாகை மலர் ஆகியவை குறித்து சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதமே நடந்தது. தவெக கொடியின் மேலேயும் கீழேயும் சிவப்பு நிறமும், நடுவில் மஞ்சள் நிறமும் இடம்பெற்றிருந்தன. நடுவில் வாகை மலரை இரண்டு போர் யானைகள் வணங்குவது போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. சிலர் இது வாகை மலரே இல்லை எனக் கூறி வந்தனர். இன்னும் சிலரோ கொடியில் உள்ளது ஆப்பிரிக்க யானைகள் எனவும், தமிழ்நாட்டில் கட்சி ஆரம்பித்துவிட்டு ஆப்பிரிக்க யானைகளை ஏன் கொடியில் வைக்க வேண்டும் எனவும் விமர்சித்தனர்.
தவெக கொடி குறித்து கட்சியின் முதல் மாநாட்டில் விளக்கம் கொடுப்பேன் என விஜய் கூறிவிட்டு சென்றுவிட்டார். இந்நிலையில், இதுகுறித்து இயக்குநர் அமீரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ”இதெல்லாம் ஒரு பிரச்சினையா, அது ஒரு கொடி அவ்வளவு தான். அதுக்குள்ள போய்கிட்டு அத டீ-கோட் பண்றதுக்கு எதுவும் இல்ல. விஜய்யே அதுகுறித்து மாநாட்டில் சொல்வதாக கூறினார். அதனால் அப்போது அது ஆப்பிரிக்கா யானையா இல்லை இறக்குமதி செய்யப்பட்ட யானையா என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒரு கொடியால் இங்கே எதுவும் மாறிவிடப் போவதில்லை.
அது ஒரு கட்சியின் அடையாளம் மட்டுமே, அதனால் அந்த கொடியில் யானை, சிங்கம், புலி என எது வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். அந்தளவுக்கு ஒரு கட்சியின் கொடியை டீ-கோட் செய்ய வேண்டியது இல்லை. அது ஒன்றும் திரைப்பட போஸ்டர் இல்லையென்றும், அந்த கொடிக்குள் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கலாம். அப்படி உங்களுக்கு அர்த்தம் தெரிந்தால் அப்படியாக எடுத்துக்கொள்ளலாம், இல்லையென்றால் அதனை கொடியாக மட்டும் பாருங்கள்” என இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.
இதனிடையே விஜய்யின் தவெக கொடி அறிமுகத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். கூலி படப்பிடிப்புக்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் விசாகப்பட்டிணம் சென்றார் ரஜினிகாந்த். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், தவெக கொடி அறிமுகம் செய்துள்ள விஜய்க்கு வாழ்த்துகள் என்றார்.
What's Your Reaction?






