சென்னையில் மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவி உயிரிழப்பு - காரணம் குறித்து போலீஸ் விசாரணை

மாணவி உயிரிழப்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Mar 17, 2025 - 16:47
Mar 17, 2025 - 17:09
 0
சென்னையில் மாடியில் இருந்து குதித்த  கல்லூரி மாணவி உயிரிழப்பு - காரணம் குறித்து போலீஸ் விசாரணை

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மகளிர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறார் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ஆயிஷா என்ற மாணவி.

இவர் கடந்த வாரம்  தேர்வு எழுத கல்லூரிக்கு வந்துள்ளார். பிறகு கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து திடீரென தற்கொலைக்கு முயன்ற ஆயிஷா கீழே குதித்துள்ளார். இதில் பலத்த காயங்களுடன் மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தேனாம்பேட்டை போலீசார் முதற்கட்ட விசாரணையில் தேர்வு எழுத வந்த ஆயிஷா தனது விடைத்தாளில் கடந்த இரண்டு வருடங்களாக சகோதரி இறந்த சோகம் தாங்காமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், தாம் இறந்த பிறகு உடல் உறுப்புகளை தானம் செய்ய உள்ளதாகவும், எழுதி வைத்துவிட்டு கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

உயிரிழந்த பெண்ணின் தற்கொலை முயற்சிக்கு உண்மையான காரணம் யார் எதற்காக அவர் மாடியில் இருந்து கீழே குதித்தார் என்று குறித்து தீவிர விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வந்த மாணவி ஆயிஷா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.  அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow