Karnataka budget 2025: சினிமா டிக்கெட் விலை அதிரடி குறைப்பு.. பட்ஜெட்டின் ஹைலைட்ஸ் என்ன?
கர்நாடக மாநிலத்திற்கான 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்தார் அம்மாநில முதல்வர் சித்தராமையா. நிதியமைச்சராக 16 வது முறையாக கர்நாடக மாநில பட்ஜெட்டினை தாக்கல் செய்து சாதனை புரிந்துள்ளார் சித்தராமையா.

கர்நாடக மாநிலத்தின் 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட்டினை அம்மாநில முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்தார். பட்ஜெட்டின் அறிவிப்புகள் பெங்களூருவின் உள்கட்டமைப்பு வளர்ச்சி, போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல், மெட்ரோ இணைப்பை விரிவுப்படுத்துதல், பொது மக்களின் பாதுகாப்பை வலுப்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டின் மொத்த மதிப்பு ரூ.4,09,549 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இதில் வருவாய் செலவினங்களுக்கு ரூ.3,11,739 கோடி, மூலதன செலவினங்களுக்கு ரூ.71,336 கோடி மற்றும் கடன் திருப்பிச் செலுத்துவதற்கு ரூ.26,474 கோடி ஆகியவை அடங்கும். நிதிப் பற்றாக்குறை ₹90,428 கோடியாக (மொத்த மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.95%) இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் வருவாய் பற்றாக்குறை ₹19,262 கோடியாக (மொத்த மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.63%) இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
புறநகர் ரயில்வே திட்டத்திற்கு முக்கியத்துவம்:
பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள மிகப்பெரிய அறிவிப்புகளில் ஒன்று பெங்களூரு புறநகர் ரயில்வே திட்டம் ஆகும். இத்திட்டத்திற்காக ₹15,767 கோடி செலவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் புதியதாக 58 நிலையங்களுடன் 148 கி.மீ தூரத்திற்கு ரயில் நெட்வொர்க் கொண்டு வரப்படும் எனவும், இது புறநகர் இணைப்பை கணிசமாக மேம்படுத்தும் எனவும் பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் ”நம்ம மெட்ரோ” நெட்வொர்க்கினை பலப்படுத்தும் வகையில் மேலும் மெட்ரோ ரயில் பாதையினை 98.60 கி.மீ. நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, நம்ம மெட்ரோ 68 நிலையங்களுடன் 79.65 கி.மீ. தூரத்தை இணைக்கிறது. தினசரி 8.5 லட்சம் பயணிகள் மெட்ரோ சேவையினை பயன்படுத்தி வருகின்றனர்.
திரையரங்கு டிக்கெட் விலை குறைப்பு:
கர்நாடக மாநிலத்தில் திரையரங்கு டிக்கெட் விலை எவ்வித கட்டுப்பாடும் இன்றி விற்கப்பட்டு வந்தது. டிக்கெட் விலையினை ஒழுங்குப்படுத்த வேண்டும் என தொடர்ச்சியாக குரல் எழுப்பப்பட்டு வந்த நிலையில் மல்டிபிளெக்ஸ் உட்பட அனைத்து திரையரங்குகளிலும் அதிகப்பட்சமாக ரூ.200 வரை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்கிற அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் முதல்வர் சித்தராமையா.
Read more: Kudumbasthan OTT: நமது வீட்டை படம் பிடித்து காட்டிய குடும்பஸ்தன் 5 மொழிகளில் வெளியீடு!
'பிராண்ட் பெங்களூரு - பசுமை பெங்களூரு' முயற்சியின் கீழ், 21 நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ₹ 1,800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ₹ 35 கோடி செலவில் 14 ஏரிகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன, அதே நேரத்தில் வர்தூர் மற்றும் பெல்லந்தூர் ஏரிகள் ₹ 234 கோடி முதலீட்டில் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன . கூடுதலாக, தேவனஹள்ளியில் 407 ஏக்கர் பரப்பளவில் பெங்களூரு சிக்னேச்சர் பூங்கா உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் நலன்:
முஸ்லிம் இடுகாடுகள் மற்றும் வக்ஃப் சொத்துக்களைப் பாதுகாக்க நடப்பு பட்ஜெட்டில் ரூ.150 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. (கடந்த ஆண்டு ரூ.100 கோடி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது). பொதுப்பணி ஒப்பந்தங்களில் 4% பிரிவு-II B இன் கீழ் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்படும் என்பதை பட்ஜெட் உரையில் உறுதிப்படுத்தினார் சித்தராமையா. இதற்கு எதிர்க்கட்சியான பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
Read more: தாலி..குங்குமம் இல்ல? அப்புறம் எப்படி கணவர் அன்பா இருப்பாரு? நீதிபதியின் சர்ச்சை கருத்து
What's Your Reaction?






