உலகம்

ரஷ்யா லிபெட்ஸ்கில் உக்ரைன் டிரோன் தாக்குதல்.. மீட்பு பணிகள் தீவிரம்!

ரஷ்யாவின் லிபெட்ஸ்க் பிராந்தியத்தில் இன்று அதிகாலை உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும், ஆளுநர் இகோர் ஆர்தமோனோவ் தெரிவித்துள்ளார்

ரஷ்யா லிபெட்ஸ்கில் உக்ரைன் டிரோன் தாக்குதல்.. மீட்பு பணிகள் தீவிரம்!
ரஷ்யா லிபெட்ஸ்கில் உக்ரைன் டிரோன் தாக்குதல்.. மீட்பு பணிகள் தீவிரம்!
ஆளுநர் இகோர் ஆர்தமோனோவ் இதுகுறித்து கூறியிருப்பதாவது, பிராந்திய தலைநகரைச் சுற்றியுள்ள மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீது உக்ரைன் டிரோன் ஒன்று விழுந்து நொறுங்கியதில், அதன் சிதறல்கள் அப்பகுதியில் விழுந்தன. இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு பகுதிகளில் இருந்து சிதறல்கள் விழுந்ததாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. மீட்பு சேவைகள் மற்றும் அவசர அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன என்று ஆர்தமோனோவ் தெரிவித்துள்ளார். மேலும், அவர், தாக்குதல் மற்றும் சேதம் குறித்த முழு விவரங்களை அவர் எதுவும் வெளியிடாத நிலையில், உக்ரைனும், இதுவரை தாக்குதல் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பினரும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதில்லை என்று கூறி வருகின்றனர். இருப்பினும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர், அவர்களில் பெரும்பாலானோர் உக்ரைனியர்கள் என்று கூறப்படுகிறது.

லிபெட்ஸ்க் பிராந்தியம் ரஷ்யாவிற்கு முக்கியமான பிராந்தியமாகும். இங்கு ரஷ்யாவின் விண்வெளிப் படைகளின் தலைமை பயிற்சி மையம் அமைந்துள்ளது. உக்ரைன் இப்பகுதி மீது பலமுறை வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ரஷ்யாவின் போர் விமானங்களை அழித்து, உக்ரைன் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக் குறைக்கும் நோக்கில் இந்த தாக்குதல்கள் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் லிபெட்ஸ்க் விமானப்படைத் தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், வழிகாட்டும் வெடிகுண்டுகள் சேதமடைந்ததாகவும், தொடர் வெடிப்புகள் ஏற்பட்டதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.