உலகம்

நேபாளில் நட்சத்திர விடுதிக்கு தீ வைப்பு.. இந்திய பெண் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு!

நேபாளத்தில் நடந்த போராட்டத்தின் போது, இந்திய பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளில் நட்சத்திர விடுதிக்கு தீ வைப்பு.. இந்திய பெண் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு!
Indian female tourist dies in Nepal
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்ற போராட்டத்தின் போது, நட்சத்திர விடுதிக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால், அதில் இருந்து வெளியே குதித்த இந்தியாவைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டத்தின் பின்னணி

நேபாளத்தில், வாட்ஸாப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்ததால், கடந்த 8-ஆம் தேதி இளைஞர்கள் பெரும் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் பலியாகினர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், கடந்த 9-ஆம் தேதி காத்மாண்டுவில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வீடுகளைச் சூறையாடினர்.

உயிரிழந்தது எப்படி?

உத்தரப் பிரதேசம், காஷியாபாத்தைச் சேர்ந்த ராம்வீர் சிங் கோலா (58) மற்றும் அவரது மனைவி ராஜேஷ் தேவி (55) ஆகியோர் தங்கள் குழந்தைகளுடன் பசுபதிநாத் கோவிலுக்குச் சென்றுள்ளனர். கடந்த 9-ஆம் தேதி இரவு, அவர்கள் ஒரு நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தபோது, ஹோட்டலுக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.

இதையடுத்து, மூன்றாவது மாடியில் இருந்த ராம்வீர் மற்றும் ராஜேஷ் தேவி ஆகியோர், கீழே வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு மெத்தைகள் மீது குதிக்குமாறு மீட்புக் குழுவினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி இருவரும் குதித்ததில், ராம்வீர் சிறு காயங்களுடன் தப்பினார். ஆனால், ராஜேஷ் தேவி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 10-ஆம் தேதி இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

தற்போது, நேபாளத்தில் இயல்புநிலை திரும்பிய நிலையில், சிக்கித் தவித்த இந்திய சுற்றுலாப் பயணிகளை மத்திய அரசு மீட்டு வருகிறது.