உலகம்

இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புடின்...அமெரிக்கா-இந்தியா இடையே வர்த்தக பதற்றம்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வருவார் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புடின்...அமெரிக்கா-இந்தியா இடையே வர்த்தக பதற்றம்
இந்திய பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்
ரஷ்யாவில் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தக பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா வரவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய அதிபர் வருகை

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 2025 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவுக்கு வருகை தருவார் என்று இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டோவல் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யாவின் எண்ணெய் வாங்குதலை மேற்கோள் காட்டி, டிரம்ப் புதன்கிழமை இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி கட்டணங்களை 50% ஆக இரட்டிப்பாக்கினார். இந்தியாவிற்கு எதிரான கடுமையான வரிகள், சீனாவை விட அதிகமாக, அமெரிக்காவின் இந்த வரியால் இரு நாடுகளிடையே வர்த்தக பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா மீதான அமெரிக்காவின் வரியால் ரஷ்யா மற்றும் சீனாவிடமிருந்து இந்தியாவை அந்நியப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
2024 ஆம் ஆண்டில், சீனாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி 62.6 பில்லியன் டாலர்களாக இருந்தது. இது இந்தியாவின் 52.7 பில்லியன் டாலர்களை விட அதிகமாகும். ஆனால் அந்த நாடு அத்தகைய அபராதங்களை எதிர்கொள்ளவில்லை என்று ஜிடிஆர்டி சுட்டிக்காட்டியுள்ளது.

வர்த்தக பதற்றம்

புது தில்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மற்ற நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களைப் பேச்சுவார்த்தை நடத்தும்போது இந்தியா தனது நிலைப்பாட்டைச் சமரசம் செய்யாது என்று குறிப்பிட்டார். மேலும், விவசாயிகளின் நலன்கள் ஒரு முக்கிய தேசிய முன்னுரிமையாகும். விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் மீனவர்களின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது என அமெரிக்காவிற்கு மறைமுகமாகப் பதிலடி கொடுத்தார்.

மேலும், அதற்கான விலையை நான் தனிப்பட்ட முறையில் கொடுக்க வேண்டியிருக்கும் என்பது எனக்குத் தெரியும், ஆனால் விவசாயிகளுக்காக அதைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன்" என்று கூறினார். இதனால் அமெரிக்காவின் வரிவிதிப்பிற்கு பயந்து இந்தியா பின்வாங்கபோவதில்லை என்று கூறப்படுகிறது. இந்தியாவின் இந்தச் செயலுக்கு ரஷ்யா வரவேற்பு தெரிவித்துள்ளனது.

இந்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் இந்திய வருகை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்த வருகையின்போது, மிக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.