உலகம்

விபத்துக்குள்ளான மலேசிய ஹெலிகாப்டர்.. அதிர்ச்சி வீடியோ

மலேசியாவில் பயிற்சியில் ஈடுபட்ட போலீஸ் ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விபத்துக்குள்ளான மலேசிய ஹெலிகாப்டர்.. அதிர்ச்சி வீடியோ
Malaysian helicopter crash
மலேசிய போலீஸ் ஹெலிகாப்டர் ஒன்று நேற்று (ஜூலை 10) காலை ஜோகூரில் உள்ள புலாய் ஆற்றில் தலைகீழாக விழுந்து விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரில் இருந்த 5 போலீசார் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீட்கப்பட்ட 5 போலீசாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலேசிய போலீஸ் ஹெலிகாப்டர் புலாய் ஆற்றில் விபத்துக்குள்ளானதைக் அங்கிருந்த பத்திரிகையாளர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.

இந்த AS355 ரக போலீஸ் ஹெலிகாப்டர், MITSATOM 2025 பயிற்சியின் ஒரு பகுதியாக பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. இந்த பயிற்சியில் இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்து குறித்து மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAM), வெளியிட்ட அறிக்கையில், 9M-PHG என்ற பதிவு எண் கொண்ட AS355N ஹெலிகாப்டர் புலாய் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் காலை 9.51 மணிக்கு நிகழ்ந்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், விபத்து குறித்து தவறான தகவல்கள் மற்றும் வீடியோக்களை பொதுமக்கள் சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாம் எனவும் விபத்து குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வ ஊடகங்கள் மூலம் வெளியாகும் என சிவில் விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.