Israel Strike on Gaza School : ஜூலை 6ஆம் தேதி வரையில் காசாவில் உள்ள 564 பள்ளிகளில் 477 பள்ளிகள் நேரடியாக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன அல்லது சேதமடைந்துள்ளன என ஐநா தெரிவித்துள்ளது.
தற்போது தாக்குதலுக்கு உள்ளான அல் டபாஈன் பள்ளியில் 1000க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர். பெய்ட் ஹனோன் நகர மக்களை அங்கிருந்து வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டிருந்த நிலையில் அங்கிருந்த மக்கள் அந்த பள்ளியில் தஞ்சம் அடைந்தனர். அந்த கட்டடம் மசூதியாகவும் செயல்பட்டு வந்ததாகவும் அதிகாலை தொழுகையின்போது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து காசா மக்கள் அவசர சேவை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பிற்காக பள்ளியில் தஞ்சம் புகுந்திருந்தவர்கள் அதிகாலையில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. தாக்குதலில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் உடல்கள் அடையாளம் காணமுடியாத வகையில் சிதைந்து போயுள்ளன என செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பஸ்சல் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் ராணுவத்தின்(Israel Attack) தொடர் தாக்குதல்களால் வீடுகளை இழந்த மற்றும் வெளியேற்றப்பட்ட பாலஸ்தீனர்களை, ஐ.நா. பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண அமைப்பு பள்ளிகளிலும், கூடாரங்கள் அமைக்கப்பட்ட தற்காலிக நிவாரண முகாம்களிலும் தங்க வைத்துள்ளது. பாலஸ்தீனர்கள் தஞ்ச மடைந்துள்ள பகுதிகளில் சர்வதேச சட்டங்களை மீறி இஸ்ரேல் ராணுவம் தொடர்ச்சியாக குண்டுகளை வீசி படுகொலை செய்கிறது.
தபீன் என்ற பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் ராணுவம்(Israel Strike) நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி பலியாகினர். இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து காசாவில் உள்ள பத்திரிகையாளர்கள் குழந்தைகளின் உடல்கள், அவர்களின் பொம்மைகள் படுக்கைகள் எரிந்து, கிழிந்து சிதறிக் கிடப்பதையும், அடையாளம் காணமுடியாத வகையில் முகம் சிதைந்தும், உடல்கள் துண்டுதுண்டாக சிதறியும் கிடக்கும் கோரக் காட்சிகளை காணொலியாக வெளியிட்டுள்ளனர்.
இது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தபீன் பள்ளி வளாகத்தில் மட்டும் சுமார் 350 பாலஸ்தீன குடும்பங்கள் தஞ்சமடைந்துள்ளனர் என்று பஸ்சல் தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். முதலில் அகதிகள் தங்குமிடங்களான பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு அடியில் ஹமாஸ் அமைப்பினர் சுரங்கம் அமைத்து தங்கியுள்ளதாக தெரிவித்து வந்த இஸ்ரேல் ராணுவம் தற்போது ஹமாஸ் வீரர்கள் மக்களோடு மக்களாக கலந்துவிட்டதாகக் கூறி இந்த கொலைகளை நியாயப்படுத்துவதற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.
இந்த தாக்குதல் போர் விரிவாக்கத்தின் ஒரு பகுதி எனவும் இது கடுமையான குற்றம் எனவும் ஹமாஸ் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேல் வைக்கும் குற்றச்சாட்டின்படி, கொலை செய்யப்பட்ட மக்களிடையே ஒரு ஹமாஸ் வீரரும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.