அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக அரியணை ஏறியுள்ள டொனால்டு டிரம்ப், உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளார். இது தொடர்பாக, ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினுடன், டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்து வருகிறார்.
இந்த நிலையில், அண்மையில் நடந்த டிரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பின் போது, ரஷ்யா உடனான யுத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் வற்புறுத்தினார். இதனை ஏற்க மறுத்த ஜெலன்ஸ்கியை அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வறுத்தெடுத்த காட்சிகள் ஊடகங்களில் நேரலையாகி சர்வதேச அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதிலும், உக்ரைன் மக்களின் உயிரோடு ஜெலன்ஸ்கி விளையாடுவதாக சாடிய டிரம்ப், மூன்றாம் உலகப்போரில் கேம்ப்ளிங் விளையாடுகிறீர்களா என்றும் கேள்விகளால் துளைத்தெடுத்தார்.
எதிரி நாட்டு அதிபர்கள் கூட செய்தியாளர் சந்திப்பில் இப்படி சண்டியிட்டுக்கொள்ள மாட்டார்கள் என்ற நிலையில், நட்பு நாடான அமெரிக்கா - உக்ரைன் உறவில் விழுந்துள்ள விரிசல், மூன்றாம் உலகப்போர் மூள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கி இருப்பதாக உலக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், பல நாடுகளில் உள்ள பொது அரசியல் தொடர்புகள், அசாதாரண போர் நிலைகள், மற்றும் சர்வதேச உறவுகளால் மூன்றாம் உலகப்போர் மூள்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதாவது, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் வட கொரியா போன்ற நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் பதற்றமான சூழல்கள், மற்றும் அரசியல் போராட்டங்கள் மிகப் பெரிய போருக்கு வழி வகுப்பதாக கூறப்படுகிறது.
இதில் மிகப்பெரிய கவலைகளில் ஒன்றாக உள்ளது என்னவென்றால், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு. இது ஏற்கனவே ஒரு குறிப்பிடத்தக்க புவிசார் அரசியல் நெருக்கடியைத் தூண்டியுள்ள நிலையில், இந்த மோதல் ரஷ்யாவை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளுடன் நேரடி எதிர்ப்பில் வைத்துள்ளது. இதனால், உக்ரைனில் நடக்கும் போர் ஒரு முக்கியமான போராக பார்க்கப்படுகிறது.
மற்றொரு புறம், உலகளாவிய மோதலுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தும் பகுதியாக மத்திய கிழக்கு இருந்து வருகிறது. ஈரான் போன்ற நாடுகள் பல ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் மோதல் போக்கையே கடைப்பிடிக்கின்றன. ஈரானின் நிலைமை, குறிப்பாக அதன் அணுசக்தித் திட்டத்தைச் சுற்றியுள்ளது. இந்த பிராந்தியத்தில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்தால், இன்னும் பல நாடுகளை உள்ளடக்கிய ஒரு மிகப்பெரிய போர் ஏற்படும் அபாயம் உள்ளது.
தைவான் மீதான சீனாவின் அதிகாரத்துவம் பெரும் கவலைகளை எழுப்புவதாகவே உள்ளன. சீனா தைவானை தனது பிராந்தியத்தின் ஒரு பகுதியாகக் கருதுகிறது. ஆனால் தைவானோ தன்னை ஒரு சுதந்திர நாடாகக் கருதுகிறது. இதில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிக்க, அமெரிக்கா, சீனா ஆகிய இரு வல்லரசு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தைவான் மீதான சீனாவின் நேரடி இராணுவ மோதல், உலகளாவிய மோதலுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து, உலகப்போர் குறித்தான பதற்ற நிலைக்கு பங்களிக்கூடிய மற்றொரு நாடாக உள்ளது வட கொரியா. அதன் தொடர்ச்சியான ஏவுகணை சோதனைகள் மற்றும் ஆக்கிரமிப்பு போன்றவை கொரிய தீபகற்பத்தின் நிலைமையை கவலைக்குரியதாக மாற்றியுள்ளது. இந்த பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்தால், தென் கொரியா அல்லது அமெரிக்காவுடன் கூட நேரடி மோதல் ஏற்படலாம்.
ஒருவேளை மூன்றாம் உலகப் போர் மூண்டால் யார் யார் கைக்கோர்பார்கள்? யார் யார் எதிரும் புதிருமாக நிற்பார்களா? யார் யார் நடுநிலையோடு செயல்படுவார்கள்? என்று பார்க்கையில்,
30 நாடுகள் ஒன்றிணைந்த நேட்டோ, அதாவது வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில், அமெரிக்காவின் தலைமையில், பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, இத்தாலி போன்ற நாடுகள், ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக உள்ள போலாந்து, டென்மார்க் மற்றும் மற்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளும், ஆசிய நாடுகளான ஜப்பான், தென் கொரியா போன்றவையும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளும் ஒன்றிணையும் வாய்ப்புகள் உள்ளன.
அமெரிக்க கூட்டணிக்கு எதிரான ஒரு பலமான அணியாக இருக்கப்போவது நிச்சயம் ரஷ்யா கூட்டணி தான். இந்த கூட்டணியில், சீனா, வட கொரியா, ஈரான், ஈராக், பெலாரஸ், சிரியா போன்ற இடதுசாரி நாடுகள் ஒன்றிணைந்து பயணிக்க வாய்ப்புகள் உள்ளன. ரஷ்யா மற்றும் சீனா இருவரும் மேற்கத்திய ஆதிக்கத்திற்கு எதிராக பெரும் குரலை எழுப்பிக் கொண்டிருப்பதால், நேட்டோவிற்கு எதிராக ஒரு கூட்டத்தை இந்த இரண்டு நாடுகளுமே சம பலத்தில் தலைமை தாங்கலாம் என்று கூறப்படுகிறது.
அதேபோல, மத்திய கிழக்கு நாடுகளின் ஆதரவும் மிகப்பெரிய பங்கை ஆற்றக்கூடும். அவர்களின் கூட்டணி என்பது அடிக்கடி மாறும். இதனால், எந்தவொரு உலகப் போர் சூழ்நிலையிலும் இப்பகுதி ஒரு பெரிய போர்க்களத்தைக் காணும் பகுதியாகவே உள்ளது.
சவூதி அரேபியாவும் வளைகுடா நாடுகளும் அமெரிக்க இராணுவம் மற்றும் பொருளாதார ஆதரவை நம்பியிருப்பதால், உலகளாவிய மோதலில் அமெரிக்கா மற்றும் நேட்டோவுடன் இணைய வாய்ப்புள்ளது. ஜோர்டன், எகிப்து, கத்தார், பெய்ரென், குவைத் ஆகிய நாடுகளும் நேட்டோவுடனே இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், ஈரான், இராக், சிரியா, லெபனான் ஆகிய நாடுகள் ரஷ்யாவுடன் கைகோர்க்கும் என்று கூறப்படுகிறது.
இதில், நடுநிலையான அல்லது போரில் ஈடுபடாத நாடுகளாக, இந்தியா, துருக்கி, பிரேசில், ஆப்பிரிக்க நாடுகள் போன்றவை இருப்பதற்கான சூழலே உள்ளன.
இப்படி பலமிக்க கூட்டணிகள் உருவாகும் என்று கூறப்படும் நிலையில், இந்த போரானது, நான்கு வகையில் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, விமானத் தாக்குதல்கள், கடற்படை போர் மற்றும் பிராந்திய போர்கள் என வழக்கமான ஒன்றாக நடக்கலாம்.
மற்றொரு புறம், மூன்றாம் உலகப்போரானது அணு ஆயுத போராக கூட நடக்கலாம் என்று கூறப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகள் அணு ஆயுத தயாரிப்பில் இறங்கியுள்ள நிலையில், இந்த போர் உலக வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான அபாயம் உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் அணு ஆயுதத் தாக்குதல்களில் ஈடுபட்டால், அது உலகளாவிய அழிவுக்கான சாத்தியத்தை கடுமையாக அதிகரிக்கும்.
சைபர் போர்... உள்கட்டமைப்பு, நிதி அமைப்புகள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளை சீர்குலைக்க, ஒரு சில நாடுகள் சைபர் தாக்குதல்களில் ஈடுபடலாம். அப்படி ஈடுப்படும் பட்சத்தில் பொருளாதார நெருக்கடி உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இப்படி, மூன்றாம் உலகப் போர் என்று ஒன்று மூண்டால், அதன் விளைவு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பேரழிவை ஏற்படுத்துவதோடு, பொருளாதார சரிவு மற்றும் மனிதாபிமான பேரழிவை ஏற்படும் எனப்தில் சந்தேகமில்லை..