உலகம்

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ.. பதறியடித்து ஓடிய பயணிகள்!

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ.. பதறியடித்து ஓடிய பயணிகள்!
Fire on American Airlines flight
அமெரிக்காவின் டென்வெர் விமான நிலையத்தில் இருந்து மியாமிக்கு புறப்படவிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தின் டயரில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் புறப்படுவதற்கு முன்பே நிறுத்தப்பட்டு, அவசர வெளியேற்றம் வழியாக பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

மேற்கு அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்திற்குட்பட்ட டென்வெர் விமான நிலையத்தில் இன்று காலை இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. மொத்தம் 173 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் மியாமிக்குச் செல்லவிருந்த விமானம், புறப்படத் தயாரான நிலையில், அதன் டயரில் தீ விபத்து ஏற்பட்டு பெரும் புகை சூழ்ந்தது.

இதனையடுத்து, விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு, விமான ஊழியர்கள் மேற்கொண்ட விரைவான நடவடிக்கையால், பயணிகள் அவசர வெளியேற்ற வாயில்கள் வழியாகப் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். லேண்டிங் கியரில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே தீ பரவியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் அறிக்கை

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், "அனைத்து பயணிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். எங்கள் பராமரிப்பு குழு விமானத்தை ஆய்வு செய்து வருகிறது. பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துகிறோம்" என்று தெரிவித்தது. மேலும், "எங்கள் விமானப் பணிக் குழுவுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். பயணிகளின் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்" எனவும் குறிப்பிட்டிருந்தது. பயணிகள் சேவையில் இருந்து அந்த விமானம் நீக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும், காயமடைந்த பயணி ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வீடியோவில், தீ விபத்து ஏற்பட்டதனால் புகை சூழ்ந்த விமானத்தில் இருந்து பயணிகள் அவசரகால வழிகளைப் பயன்படுத்தி வெளியேறுவதை காண முடிகிறது.

தீ விபத்து குறித்து தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமான நிறுவனம், அனைத்துப் பயணிகளுக்கும் மாற்று விமானத்தில் பயணிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.