உலகம்

காசாவில் பாலுக்காக ஏங்கும் குழந்தைகள்...கண்ணீர் வடிக்கும் தாய்மார்கள்

உணவு மற்றும் பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி அனுப்ப இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்று காசா மக்கள் சர்வதேச அமைப்புகளிடம் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்

 காசாவில் பாலுக்காக ஏங்கும் குழந்தைகள்...கண்ணீர் வடிக்கும் தாய்மார்கள்
காசாவில் பால் கூட இல்லாமல் பச்சிளம் குழந்தைகள் கடும் அவதி
இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையே போர் நடந்து வரும் நிலையில், காசா நிலப்பரப்பில், குண்டு வெடிப்புகளின் ஓலத்தை விட, தாய்மார்களின் அழுகுரல் விண்ணை பிளக்கிறது. காரணம், அங்குள்ள பச்சிளம் குழந்தைகளுக்கோ, பாலூட்டும் தாய்மார்களுக்கோ உணவில்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

காசாவில் உணவு பஞ்சம்

உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும் காசாவில், குழந்தைகளின் நிலைமை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அங்குள்ள கடைகளில் பால் பவுடர் கிடைக்காமல், பச்சிளம் குழந்தைகளுக்கு என்ன கொடுப்பதென்று தெரியாமல் தாய்மார்கள் கதறி அழுகின்றனர். ஒருபுறம் போர், மறுபுறம் உணவுப் பற்றாக்குறை என இரட்டை நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் காசா மக்கள், தங்கள் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற போராடி வருகின்றனர்.

பால் கிடைக்காததால் குழந்தைகள் மெலிந்து, நோயின் பிடியில் சிக்கி தவிக்கின்றனர். பால் கூட இல்லை என்று தாய்மார்கள் கதறும் வீடியோக்கள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பால் கூட இல்லாமல் தவிப்பு

சர்வதேச மனித உரிமை அமைப்புகள் காசாவுக்குள் உணவுப் பொருட்களை அனுப்ப முயற்சித்தாலும், இஸ்ரேலின் கட்டுப்பாடுகள் காரணமாக அவை முழுமையாக சென்று சேரவில்லை என்று கூறப்படுகிறது. இதன்காரணமாக உணவுப் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து, குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

உடனடியாக காசாவுக்குள் உணவு மற்றும் பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி அனுப்ப இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்று காசா மக்கள் சர்வதேச அமைப்புகளிடம் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக உதவ முன்வர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காசா மக்கள் உருக்கமாக கோரிக்கை

போரின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் காசா மக்களின் துயர் துடைக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மனிதம் இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில், காசா குழந்தைகளின் பசிப்பிணியை போக்க உலக நாடுகள் உடனடியாக உதவ முன்வருவோம் என்று என்பதே காசா மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.