Kamala Harris Warn Israel PM Netanyahu : அமெரிக்க அதிபர் தேர்தல் பரபரப்புக்கு நடுவே, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு கமலா ஹாரிஸ் எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் சர்வதேச அரசியலில் கவனம் ஈர்த்துள்ளது. அமெரிக்கா சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அந்நாட்டு நாடளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார். அப்போது பாலஸ்தீனம் மீதான போருக்கு அமெரிக்கா துணை நிற்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். காஸா தாக்குதலுக்கு எதிராக உலகம் முழுவதும் இருந்து கடுமையான கண்டன குரல்கள் எழுந்து வரும் நிலையில், நெதன்யாகுவின் இந்த கோரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதாவது, இருநாட்டின் எதிரிகளும் ஒன்றுதான் என்பதால், எங்கள் வெற்றி உங்களுக்கும் வெற்றியாக அமையும். காஸாவை கைப்பற்றுவதோடு, இந்த விவகாரத்தில் நமக்கு எதிரியாக உள்ள ஈரனையும் வீழ்த்தி மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நாம் தடம் பதிக்க வேண்டும். அமெரிக்க சார்பு ஜனநாயக அரசாக இஸ்ரேல் உள்ளது. தொடர்ந்து பேசிய அவர், இத்தனை ஆண்டுகளாக ஆயுதங்கள் வழங்கியதற்கு நன்றி தெரிவித்ததோடு, மேலும் ஆயுதங்கள் கொடுத்த உதவ வேண்டும் எனவும் கூறினார். மேலும், ஹாமாஸ் அமைப்பினர் சரணடைந்து இஸ்ரேலிய பணய கைதிகளை திருப்பி அனுப்பாத வரை இஸ்ரேலின் தாக்குதல் தொடரும் எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து அமெரிக்க ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸையும் நெதன்யாகு சந்தித்து பேசினார். அப்போது காஸா மீதான தாக்குதல் குறித்த நெதன்யாகுவின் பேச்சுக்கு கமலா ஹாரிஸ் கண்டனம் தெரிவித்தார். போர் நிறுத்தம் கொண்டு வரவேண்டிய நேரம் இது என்றும், காஸாவின் நிலையை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம் எனவும், நெதன்யாகுவிற்கு எச்சரிக்கை விடுத்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமலா ஹாரிஸ், இஸ்ரேலுக்கு தன்னை தற்காத்துக்கொள்ளும் அனைத்து உரிமைகளும் உள்ளன. ஆனால், கடந்த 9 மாதங்களாக காஸாவில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது ரொம்பவே முக்கியமானது.
அங்கு நிகழும் பேரழிவுகளால் அப்பாவி குழந்தைகள் உயிரிழக்கின்றன. மேலும், பசி கொடுமை, புலம் பெயரும் மக்கள் என இந்த கொடுமையை எல்லாம் பார்த்துக்கொண்டு உணர்ச்சி அற்றவர்களாக சும்மா இருக்க முடியாது. பேச்சுவார்த்தைகள் மூலம் போர் நிறுத்தப்பட்டு, பணய கைதிகளை மீட்கும் நேரம் வந்துவிட்டது எனக் கூறினார். மேலும், பாலஸ்தீனத்தின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டும் நேரம் இது என்றும் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். நெதன்யாகுவின் முகத்திற்கு நேராகவே கமலா ஹாரிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது, காஸா விவகாரத்தில் பெரிய மாற்றத்தை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க - ஜோ பைடன் தேர்தலில் இருந்து விலக இதுதான் காரணமா?
இதனிடையே நெதன்யாகுவின் இந்த உரைக்கு உலகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது பொறுப்பற்ற பேச்சு என்றும், காஸா மீதான தாக்குதல்களை தொடர்வது மிக மோசமான இழப்புகளுக்கு வழிவகுக்கும் எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. முன்னதாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் நெதன்யாகு பேசிக் கொண்டிருக்கும்போதே, வெளியே ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதோடு அமெரிக்காவின் பல பகுதிகளிலும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் வருகைக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.