உலகம்

இந்தியப் பொருட்களுக்கு நாளை முதல் 50% வரி- அமெரிக்கா நோட்டீஸ்!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நாளை (ஆக.27) முதல் 50% வரிவிதிப்பு அமலுக்கு வரும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்தியப் பொருட்களுக்கு நாளை முதல் 50% வரி- அமெரிக்கா நோட்டீஸ்!
Additional tariffs on India
உக்ரைனுடன் போரில் ஈடுபடும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாகக் குற்றம்சாட்டி, இந்தியப் பொருட்கள் மீது ஏற்கெனவே விதிக்கப்பட்ட 25 சதவீத வரியுடன் கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அண்மையில் அறிவித்திருந்தது. இந்தத் தண்டனை வரிவிதிப்பு ஆகஸ்ட் 27 ஆம் தேதி அதிகாலை 12:01 மணி முதல் அமலுக்கு வரும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கூடுதல் வரி விதிப்பு

அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை மூலம் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "ரஷ்ய கூட்டமைப்பின் அரசால் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களுக்குப் பதிலடியாக" இந்தப் புதிய வரிகள் விதிக்கப்படுவதாகவும், இந்த வரிவிதிப்புக் கொள்கையின் ஒரு பகுதியாகவே இந்தியா இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆகஸ்ட் 6 ஆம் தேதி கையொப்பமிடப்பட்ட அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவு எண்: 14329-ல் வரிகள் உயர்த்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பு மூலம், இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்படும் மொத்த கூடுதல் வரி 50 சதவீதமாக அதிகரித்துள்ளது.

டிரம்ப் நிர்வாகத்தின் அறிவிப்பு

அதிபர் டிரம்ப், ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்குப் பின்னர் கிடங்குகளில் இருக்கும் அனைத்துப் பொருட்களுக்கும் இறக்குமதி வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளத் தவறினால், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது கூடுதல் வரிகள் விதிக்கப்படலாம் என்றும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றால் வரும் வாரங்களில் மிகப் பெரிய விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

எவ்வளவு அழுத்தம் வந்தாலும் எதிட்கொள்வோம்- பிரதமர் மோடி

அமெரிக்காவின் புதிய வரி விதிப்புகள் நடைமுறைக்கு வரும் இரண்டு நாட்களுக்கு முன்பு, பிரதமர் மோடி, இந்தியாவின் பொருளாதாரம் எந்த அழுத்தத்தையும் தாங்கும் எனத் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத் நகரின் நிகோல் பகுதியில் நேற்று (ஆகஸ்ட் 25) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “எவ்வளவு அழுத்தம் வந்தாலும், அதை எதிர்கொள்ளும் நமது வலிமையை நாம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்போம்" என்று கூறினார்.

மேலும், தனது அரசு சிறு தொழில்முனைவோர், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் ஆகியோருக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.