சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வைத்தியலிங்கம் முத்துக்குமார் (49) என்பவர், தனது முதல் மனைவிக்குத் தெரியாமல் ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால், அவருக்கு சிறைத் தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2007-ஆம் ஆண்டு இந்தியாவில் தனது முதல் மனைவியைத் திருமணம் செய்த வைத்தியலிங்கம் முத்துக்குமார், 2011-ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குச் சென்று வேலை பார்த்து வந்தார். அங்கு தனது மனைவியுடன் வாழ்ந்து வந்த நிலையில், தனது சக ஊழியரான சல்மா அப்துல் ரசாக் என்பவரைச் சந்தித்து அவருடன் உறவில் இருந்துள்ளார்.
தனக்கு குழந்தை வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த வைத்தியலிங்கம், தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக சல்மாவை நம்பவைத்தார். வைத்தியலிங்கம் ஏற்கனவே திருமணமானவர் என்று தெரிந்திருந்தும், இந்த வாக்குறுதியை நம்பி சல்மா அவரை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார்.
அதன்படி, 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாகூரில் இஸ்லாமிய வழக்கப்படி இருவரும் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் சல்மாவுடன் சிங்கப்பூருக்குத் திரும்பிய வைத்தியலிங்கம், தனது முதல் மனைவியுடன் வசித்து வந்த அதேவேளையில், ரகசியமாக இரண்டாவது மனைவி சல்மாவையும் சந்தித்து வந்தார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி, சல்மா ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். குழந்தையைப் பார்ப்பதற்காக வைத்தியலிங்கம் சிங்கப்பூரில் உள்ள ஒரு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது, அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த அவரது முதல் மனைவி, மகப்பேறு வார்டில் இருந்து வைத்தியலிங்கம் வெளியே வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நேருக்கு நேர் கேள்வி கேட்டபோது, தனது இரண்டாவது திருமணம் பற்றிய உண்மையை வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.
இதையடுத்து, வைத்தியலிங்கம் சிங்கப்பூர் குடியுரிமைக்கு விண்ணப்பித்தபோது, தனது முதல் மனைவியை ஆதரவாளராக பதிவு செய்து, வேறு யாரையும் திருமணம் செய்யவில்லை என்று பொய்யான தகவல் அளித்ததும் விசாரணையில் தெரியவந்தது.
அதேபோல, தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாத நிலையில் இரண்டாவது திருமணம் செய்ததால், இரண்டாவது மனைவி சல்மாவும் சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், இருதார மணம் மற்றும் அரசுக்கு தவறான தகவல் அளித்த குற்றங்களுக்காக முத்துக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்தக் குற்றங்களை ஒப்புக்கொண்ட வைத்தியலிங்கத்துக்கு, மூன்று மாதங்கள் மற்றும் மூன்று வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.