தொழில்நுட்பம்

கைவிரித்த உச்சநீதிமன்றம்.. சிக்கலில் வோடபோன் ஐடியா- ஏர்டெல் நிறுவனங்கள்!

நிலுவையிலுள்ள வருவாய் பகிர்வு தொகையில் வட்டி, அபராதம், அபராதத்துக்கான வட்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால், பங்குச்சந்தையில் வோடபோன் ஐடியா பங்குகள் 12% க்கும் அதிகமாக சரிந்தன. வர்த்தக நேர முடிவில் வோடபோன் ஜடியாவின் பங்கு கிட்டத்தட்ட 9 சதவீதம் சரிந்திருந்தது.

கைவிரித்த உச்சநீதிமன்றம்.. சிக்கலில் வோடபோன் ஐடியா- ஏர்டெல் நிறுவனங்கள்!
supreme Court rejects AGR dues waiver plea of Vodafone Idea
இந்தியாவில் ஏர்டெல், ஜியோ, வோடோபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களாக விளங்குகின்றன. அலைக்கற்றை பயன்படுத்துதலுக்கான கட்டணம் மற்றும் உரிம கட்டணம் போன்றவற்றை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டும். இதனை வருவாய் பகிர்வு தொகை (adjusted gross revenue-AGR) என்று குறிப்பிடுவார்கள்.

ஆனால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முறையாக அரசுக்கு வருவாய் பகிர்வு தொகையினை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தது பெரிய விவாதங்களை கிளப்பியது. இதுத்தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் தலையில் இடியை இறக்கியது. நிலுவையிலுள்ள வருவாய் பகிர்வு தொகையின் அசல், அதற்கான வட்டி, காலம் தாழ்த்தியதற்கான அபராதம், அந்த அபராதத்துக்கான வட்டியையும் சேர்த்து மொத்தமாக அரசுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.83,400 கோடியையும்,, ஏர்டெல் நிறுவனம் ரூ.38,000 கோடியையும் அரசுக்கு செலுத்த உத்தரவிடப்பட்டது. அரசாங்கம் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் நிலுவைத் தொகையில் ஒரு பகுதியை ஈக்விட்டியாக மாற்றி 49% பங்குகளை வாங்கிய போதிலும், வோடபோன் ஐடியா தொடர்ந்து நிதி நெருக்கடியில் சிக்கி திணறி வருகிறது.

கைவிரித்த உச்சநீதிமன்றம்:

இந்நிலையில் ஏர்டெல், வோடாபோன் ஐடியா மற்றும் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனங்கள் வட்டி, அபராதம், அபராதத்துக்கான வட்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென என உச்சநீதிமன்றத்தில் ரீட் மனுத்தாக்கல் செய்தது.

நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, "எங்கள் முன் வந்துள்ள இந்த மனுக்களால் நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம். ஒரு பன்னாட்டு நிறுவனத்திடமிருந்து இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் இந்த மனுவை தள்ளுபடி செய்வோம்," என்று வோடபோன் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியிடம் நீதிபதிகள் தெரிவித்தார்கள்.

உச்சநீதிமன்றம் கைவிரித்த நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். முன்னதாக, வோடபோன் ஐடியா தலைமை நிர்வாக அதிகாரி அக்ஷயா மூந்த்ரா, நிலுவையிலுள்ள அரசுக்கு செலுத்த வேண்டிய வருவாய் பகிர்வு தொகை தொடர்பாக கோரிக்கை ஒன்றினை தகவல் தொலைத் தொடர்புத் துறைக்கு வைத்திருந்தார். அதில், இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா, கடுமையான நிதிச்சுமையில் சிக்கி இருப்பதாகவும், அதனால் வட்டி மற்றும் அபராதங்களிலிருந்து விலக்கு அளிக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையினை பரிசீலிக்க முடியாது என தகவல் தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ஐடியா (Vi) நிறுவனம், 2024 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (ஜனவரி–மார்ச்) ₹7,674.6 கோடி நிகர இழப்பை சந்தித்துள்ளது. ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்களுடன் போட்டியிட முடியாமல் தொலைத் தொடர்பு துறையில் திணறி வருகிறது. சரிவிலிருந்து மீளவில்லை என்றால், வோடபோன் ஐடியா (Vi) நிறுவனம் திவாலாகும் சூழ்நிலை ஏற்படலாம் என டெக் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.