தொழில்நுட்பம்

e-passport: இ-பாஸ்போர்ட்டில் இவ்வளவு விஷயம் இருக்கா? எப்படி வாங்குறது?

தனிப்பட்ட தரவைப் பாதுகாக்கவும், பாஸ்போர்ட் பதிவுகள் நகலெடுப்பதைத் தடுக்கவும் இந்திய அரசு இ-பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த e-passport-ல் அடங்கியிருக்கும் சிறப்பம்சங்கள் என்ன? இதை எப்படி பெறுவது என்பதை இங்கு காணலாம்.

 e-passport: இ-பாஸ்போர்ட்டில் இவ்வளவு விஷயம் இருக்கா? எப்படி வாங்குறது?
importantance of e-passport
தனிப்பட்ட நபர்களின் தரவுகள் திருட்டு, போலி பாஸ்போர்ட் உருவாக்குதல் போன்ற நடைமுறை சிக்கல்களை தடுக்கும் வகையில் மேம்பட்ட பாதுகாப்பு அம்சத்தை பாஸ்போர்ட்டில் கொண்டு வர தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மின்னனு பாஸ்போர்ட்டினை (e-passport) இந்தியாவில் முழுமையாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு கடந்த ஆண்டு முதலே வேலைகளை தொடங்கியது.

வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, பாஸ்போர்ட் சேவா திட்டத்தின் (PSP) 2.0 கீழ், கடந்த ஏப்ரல் 1, 2024 அன்று சோதனைக் முயற்சியாக இ-பாஸ்போர்ட் திட்டம் தொடங்கப்பட்டது. இதுவரை, நாக்பூர், புவனேஸ்வர், ஜம்மு, கோவா, சிம்லா, ராய்ப்பூர், அமிர்தசரஸ், ஜெய்ப்பூர், சென்னை, ஹைதராபாத், சூரத் மற்றும் ராஞ்சி ஆகிய இடங்களில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்கள் இ-பாஸ்போர்ட்களை வழங்கி வருகின்றன.

தமிழ்நாட்டினை பொறுத்த வரை மார்ச் 3, 2025 முதல் சென்னையில் உள்ள பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகத்தில் இ-பாஸ்போர்ட்டுகள் வழங்கும் செயல்முறை தொடங்கப்பட்டது. வெளியுறவு அமைச்சகத்தின் தரவுகளின் படி, மார்ச் 22 ஆம் தேதிக்குள் தமிழகத்தில் 20,700-க்கும் மேற்பட்ட இ-பாஸ்போர்ட்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ-பாஸ்போர்ட் என்றால் என்ன?

இ-பாஸ்போர்ட் என்பது கூடுதல் டிஜிட்டல் அம்சங்களைக் கொண்ட வழக்கமான பாஸ்போர்ட் ஆகும். இதில் RFID சிப் (Radio Frequency Identification) எனப்படும் ஒரு சிறிய சிப் மற்றும் அட்டையின் உள்ளே ஒரு ஆண்டெனா ஆகியவை இருக்கும். இந்த சிப் கைரேகைகள் மற்றும் முக விவரங்கள் போன்ற தனிப்பட்ட மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை சேமிக்கிறது. முன் அட்டையில் இடம்பெற்றிருக்கும் ஒரு சிறிய தங்கநிற குறியீடு அதை இ-பாஸ்போர்ட்டாக அடையாளம் காண உதவுகிறது.

இ-பாஸ்போர்ட்: என்ன வித்தியாசம்?

பாரம்பரிய பாஸ்போர்ட்களைப் போலன்றி, இ-பாஸ்போர்ட் அச்சிடப்பட்ட வடிவத்திலும் பாதுகாப்பான ஸ்மார்ட் சிப்பிலும் தரவை வைத்திருக்கிறது . உலகெங்கிலும் உள்ள குடியேற்ற அதிகாரிகள் (Immigration officers) தரவு உண்மையானதா என்பதை உறுதிப்படுத்த சிப்பைச் சரிபார்த்தாலே போதும். சிப்பில் சேமிக்கப்படும் தரவு, PKI (Public Key Infrastructure) எனப்படும் ஒரு அமைப்பைப் பயன்படுத்தி பாதுகாக்கப்படுகிறது. இது முக்கியமான தனிப்பட்ட மற்றும் பயோமெட்ரிக் தகவல்கள் திருடப்படுவதை தடுக்க உதவுகிறது.

ஏன் இ-பாஸ்போர்ட் முக்கியமானது?

பாஸ்போர்ட் மோசடியிலிருந்து பாதுகாப்பதே இ-பாஸ்போர்ட் கொண்டுவரப்படுவதன் முக்கிய குறிக்கோள். RFID சிப், போலி அல்லது நகல் பாஸ்போர்ட்களை உருவாக்குவதை கடினமாக்குகிறது. இ-பாஸ்போர்ட் மூலம் விமான நிலையங்களில் சோதனையின் போது பயணிகளின் அடையாளத்தை சரிபார்ப்பதை எளிதாகவும், வேகமாகவும் மேற்கொள்ள இயலும். இதனால் காத்திருப்பு நேரம் கணிசமாகக் குறைகிறது.

இ-பாஸ்போர்ட்டை எப்படிப் பெறுவது?

நாக்பூர், புவனேஸ்வர், ஜம்மு , கோவா, சிம்லா, ராய்ப்பூர், அமிர்தசரஸ் , ஜெய்ப்பூர், சென்னை , ஹைதராபாத், சூரத் மற்றும் ராஞ்சி ஆகிய 12 நகரங்களில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களில் தற்போது இ-பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன. இந்த சேவையை இந்த வருடத்திற்குள் மேலும் பல இடங்களுக்கு விரிவுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

பேப்பர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு சிக்கலா?

உங்களிடம் ஏற்கனவே செல்லுபடியாகும் பாஸ்போர்ட் இருந்தால், உடனடியாக மின்-பாஸ்போர்ட்டைப் பெற வேண்டிய அவசியமில்லை. உங்கள் தற்போதைய பாஸ்போர்ட் அதன் காலாவதி தேதி வரை செல்லுபடியாகும். நீங்கள் இப்போது ஆன்லைனில் இ-பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், சென்னை, நாக்பூர், ஹைதராபாத், ஜெய்ப்பூர் மற்றும் பிற நகரங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சேவா மையங்கள் (PSK) அல்லது பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகங்களின் (RPO) வாயிலாகவும் இ-பாஸ்போர்ட் பெறலாம்.

இந்திய குடிமக்களுக்கு சர்வதேச பயணத்தை பாதுகாப்பானதாகவும், திறமையானதாகவும் மாற்ற இந்த இ-பாஸ்போர்ட் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.