தமிழ்நாடு

ஐபிஎல் போட்டியால் நேர்ந்த சோகம்.. பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்கள்

ஐபிஎல் போட்டியை பார்த்துவிட்டு சென்ற இளைஞர்களின் இருசக்கர வாகனம் ஆலந்தூர் மெட்ரோ ரயில் தூணில் மோதி விபத்து ஏற்பட்டதில் இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

ஐபிஎல் போட்டியால் நேர்ந்த சோகம்.. பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்கள்
பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்கள்

18-வது ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் 3-வது லீக் போட்டியான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி நேற்று (மார்ச் 23) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதனை காண்பதற்காக லட்சகணக்கான ரசிகர்கள் சேப்பாக்கத்தில் குவிந்தனர்.

இந்நிலையில், சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கால்வின் கென்னி, சித்தார்த்தன் இருவரும் நேற்று (மார்ச் 23)  இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியை கண்டு களித்துள்ளனர். பிறகு தங்களது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பினர். இருசக்கர வாகனத்தை கால்வின் கென்னி ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம்  ஆலந்தூர் மெட்ரோ ரயில் தூணில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இளைஞர்கள் இருவரும் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், இருவரது உடலையும் கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இருவரும் மதுபோதையில் இருந்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார் பிரேத பரிசோதனைக்கு பிறகு தெரிய வரும் என்று தெரிவித்துள்ளனர்.