தமிழ்நாடு

பசும்பொன்னில் தேவர் பெயரில் திருமண மண்டபம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் பெயரில் திருமண மண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பசும்பொன்னில் தேவர் பெயரில் திருமண மண்டபம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
CM Stalin
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக நேற்று இரவு மதுரை வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை மதுரையில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு, பசும்பொன் நினைவிடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

மதுரையில் மரியாதை

அரசின் சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த முதல்வர் ஸ்டாலின், இன்று காலை மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து சிலைக்கு அருகில் இருந்த தேவர் படத்துக்கும் மலர் தூவி மரியாதை செய்தார். இதன்பின் தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர் சிலைக்கும் அவர் மாலை அணிவித்தார்.

முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம்

பின்னர், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், "இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னையே ஒப்படைத்து உழைத்த தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினோம்" என்று தெரிவித்தார்.

கருணாநிதி செய்த பணிகள்

தி.மு.க. ஆட்சியில் தேவருக்காகச் செய்யப்பட்ட பணிகளை விரிவாக எடுத்துரைத்த முதல்வர் ஸ்டாலின், "பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தை 1969-ல் பார்வையிட்டு, 1974-ல் மணிமண்டபமாக உருவாக்கி கொடுத்தவர் கருணாநிதிதான். பாம்பன் பாலத்தைக் கட்டிய நீலகண்டன் தான் இந்த மணிமண்டபத்தையும் கட்டினார்.

மதுரையில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் தேவர் சிலை திறப்பு விழாவுக்கு அன்றைக்கு குடியரசுத் தலைவராக இருந்த வி.வி. கிரியை அழைத்து வந்து தலைமை வகித்தவரும் கருணாநிதிதான். மதுரை ஆண்டாள் புரம் பாலத்துக்குத் தேவர் பெயரை சூட்டியதும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேவர் பெயரால் ரூ.25 லட்சம் மதிப்பிலான அறக்கட்டளையை உருவாக்கியதும் கருணாநிதிதான்.

நூற்றாண்டு விழா பணிகள்

2007-ல் முத்துராமலிங்கத் தேவரின் நூற்றாண்டு விழாவை மாபெரும் அரசு விழாவாகக் கொண்டாடியதும், தேவரின் நினைவிடத்தில் அணையா விளக்கை அமைத்தது, தேவர் இல்லத்தை ரூ.10 லட்சத்தில் புதுப்பித்தது, ரூ.9 லட்சத்தில் தேவர் நூற்றாண்டு விழா வளைவு அமைத்தது போன்றவற்றைச் செய்தது கருணாநிதிதான்.

முத்துராமலிங்கத் தேவரின் நூற்றாண்டு விழாவையொட்டிப் பசும்பொன் கிராமத்துக்கு மட்டும் ரூ.2 கோடியே 5 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயில் பணிகளைச் செய்ததும் தி.மு.க. அரசுதான்.

புதிய அறிவிப்பு

தேவர் ஜெயந்தி விழாவில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, மக்களை மழை வெயிலில் இருந்து பாதுகாக்கத் தேவர் நினைவிடத்தில் ரூ.1.55 கோடியில் அமைக்கப்பட்ட தெய்வத் திருமகனார் அரங்கத்தை கடந்த ஆண்டுத் தாம் திறந்துவைத்ததாக முதல்வர் தெரிவித்தார்.

இப்போது பசும்பொன்னில் புதிதாகத் திருமண மண்டபம் அமைக்க வேண்டுமென ஒரு கோரிக்கை எழுந்துள்ளது. அதனை உடனடியாக ஏற்று ரூ.3 கோடியில் இங்கே தேவர் பெயரில் திருமண மண்டபம் அமைக்கப்படும்" என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.