தமிழ்நாடு

ரூ.26,000 கோடி முதலீடுகளுக்கு ஒப்பந்தம்.. நாம் படைத்த சாதனைகளை நாமே முறியடிக்கிறோம்- முதல்வர் ஸ்டாலின்

தொழில்துறையில் தமிழகம் படைத்த சாதனைகளை தமிழகமே முறியடித்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

ரூ.26,000 கோடி முதலீடுகளுக்கு ஒப்பந்தம்.. நாம் படைத்த சாதனைகளை நாமே முறியடிக்கிறோம்- முதல்வர் ஸ்டாலின்
CM Stalin
ஒசூரில் இன்று நடைபெற்ற தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், "இன்று ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகள் கையெழுத்தாவது மூலம் நாம் படைத்த சாதனைகளை நாமே முறியடிக்கிறோம்" என்று தெரிவித்தார்.

ரூ. 26 ஆயிரம் கோடி முதலீடு

ஒசூரில் இன்று நடைபெற்ற தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். இதில் பேசிய அவர், "ஜெர்மனி, லண்டன் போன்ற ஐரோப்பிய பயணங்களை முடித்துக் கொண்டு ரூ.15,516 கோடி முதலீடுகளுடன் திரும்பிய மூன்று நாள்களில், இந்த முதலீட்டாளர் மாநாட்டில் உங்களைச் சந்தித்திருக்கிறேன். இன்று இங்கு ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகள் கையெழுத்தாகின்றன. இதன் மூலம் நமது சாதனைகளை நாமே உடைக்கிறோம். மேலும், 8 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய ரூ.1060 கோடி மதிப்பிலான நான்கு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது" என்று கூறினார்.

ஒசூரின் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்கள்

தொடர்ந்து பேசிய அவர், "ஒசூர் திறமையும் புதுமையும் சந்திக்கும் நகரமாக உள்ளது. தமிழகத்தின் வரைபடத்தில் தனித்த அடையாளம் பெற்ற நகரமாகவும், இந்தியாவைக் கடந்து உலக அளவில் தனிக்கவனம் பெறும் நகரமாகவும் ஒசூர் திகழ்கிறது. தமிழகம் தொழில்துறையில் இந்த அளவுக்கு வேகமாக முன்னேறி வருவதற்கு, துடிப்பான, இளமையான தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாதான் காரணம்" என்று புகழ்ந்தார்.

மேலும், "கடந்த மாதம் தூத்துக்குடியில் புதிய தொழில் நிறுவனத்தைத் தொடங்கி வைத்தேன். இன்று மாலை ஒசூரில் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய உற்பத்திப் பிரிவைத் தொடங்கி வைக்கவிருக்கிறேன். தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் நாங்கள், வரும் 2030-க்குள் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்பதுதான் இலக்காக நிர்ணயித்தோம். இதனால்தான், இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19 விழுக்காட்டைத் தொட்டிருக்கிறது" என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.