தமிழ்நாடு

எதுக்கு புஸ்ஸி போட்டோ? ஸ்டிக்கரை மறைத்த தவெக.. கலாய்க்கும் நெட்டிசன்கள்

'மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய்' என தவெகவினர் ஒவ்வொரு வீடாக ஸ்டிக்கர் ஒட்டி வந்த நிலையில், விஜயின் முகம் மட்டுமே அதில் இருக்க வேண்டும் என கட்சி தலைமையிடமிருந்து உத்தரவு பிறந்துள்ளது.

எதுக்கு புஸ்ஸி போட்டோ? ஸ்டிக்கரை மறைத்த தவெக.. கலாய்க்கும் நெட்டிசன்கள்
Viral Video Shows TVK Cadres Hastily Covering Campaign Stickers in Kumbakonam
வருகிற சட்டமன்றத் தேர்தலுக்காக தமிழகத்திலுள்ள கட்சிகள் தற்போதே தேர்தல் பிரச்சார பணிகளை தொடங்கிவிட்டன. திமுகவினர் வீடு வீடாக சென்று “ஓரணியில் தமிழ்நாடு” என்கிற பிரச்சாரத்துடன் கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி “புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணம்” என்கிற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

புதிதாக தேர்தல் களத்திற்குள் வந்துள்ள தமிழக வெற்றிக் கழகம் திமுக, அதிமுகவிற்கு இணையாக தேர்தல் பணிகளை தற்போதே தொடங்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது. இன்னும் விஜய் தீவிர அரசியலில் இறங்காத சூழ்நிலையில், 'மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய்' என்கிற பெயரினை மக்கள் மத்தியில் பதிய வைக்க்க வேண்டிய நடவடிக்கைகளில் தவெக தொண்டர்கள் களமிறங்கியுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, சமூக வலைத்தளங்களில் ஹேஸ்டாக் உருவாக்குதல், பிரத்யேக டிபி உருவாக்குதல் போன்றவற்றில் தவெகவினர் ஈடுபட்ட வந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) 'மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய்' என அச்சிடப்பட்ட ஸ்டிக்கரை நேற்று கும்பகோணத்தில் வீடு வீடாக ஒட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

அந்த ஸ்டிக்கரில் தவெக தலைவர் விஜய்யின் புகைப்படத்துடன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் புகைப்படமும் இடம்பெற்று இருந்தது. இந்நிலையில், ஸ்டிக்கரில் உள்ள புஸ்ஸி ஆனந்த் புகைப்படத்தை உடனடியாக அகற்றிவிட்டு புதிய ஸ்டிக்கரை ஒட்டுமாறு கும்பகோணம் நிர்வாகிகளுக்கு கட்சித் தலைமை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, இரவோடு இரவாக புஸ்ஸி ஆனந்த் புகைப்படத்துடன் கூடிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட வீடுகளுக்குச் சென்று, விஜய் புகைப்படம் மட்டுமே கொண்ட புதிய ஸ்டிக்கரினை கட்சி நிர்வாகிகள் ஒட்டிச் சென்றுள்ளனர். விஜய் புகைப்படம் மட்டுமே கொண்ட ஸ்டிக்கரினை ஓட்டுவது தொடர்பாக வீடியோ பதிவு செய்து தலைமை கழகத்திற்கு அனுப்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி தலைமை கழகத்திற்கு அனுப்பப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, மற்ற கட்சியினர் மத்தியில் ட்ரோல் மெட்டீரியலாக மாறியுள்ளது.