காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2004-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பத்து ஆண்டுகள் மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்தார். இந்திய அரசியலில் மன்மோகன் சிங் செய்த பொருளாதாரப் புரட்சி இன்றும் நினைவுகூரப்படுகிறது. 2008-ல் உலகம் முழுவதிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை திறமையுடன் சமாளித்தார்.
முன்னாள் இந்திய பிரதமர், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர், இந்திய அரசின் பொருளாதார ஆலோசகர், காங்கிரஸ் மூத்த தலைவர் என்று பல்வேறு அடையாளங்களுடன் திகழ்ந்த டாக்டர். மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த டாக்டர்.மன்மோகன் சிங் நேற்று (டிச.26) இரவு 9.51 மணிக்கு உயிரிழந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவையொட்டி ஏழு நாட்கள் தூக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும், அனைத்து அரசியல் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மத்திய அமைச்சரவை அவசரக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்மோகன் சிங் மறைவிற்கு அரசியல் தலைவர், பிரபலங்கள் என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் தனது சமூக வலைதளத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரின் மகத்தான ஞானத்துடன் இந்தியாவை நேர்மையுடன் வழிநடத்தினார். அவர் குறைவாக பேசினார், ஆனால், அதிகமாக செய்துள்ளார்.
இந்திய பொருளாதாரம் உள்ளிட்ட பல உன்னத சேவைகளுக்கு அவரது ஈடு இணையற்ற பங்களிப்பு என்றென்றும் போற்றப்படும். இந்த சோகமான நேரத்தில் அவரது குடும்பத்தினர், அவரது நண்பர்கள், தொண்டர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.