தமிழ்நாடு

சென்னை நகைக்கடையில் துணிகரம்: உரிமையாளரை பெல்ட்டால் கட்டிப்போட்டு கொள்ளை!

சென்னை யானைக்கவுனி பகுதியில் உள்ள நகைக்கடையில், உரிமையாளரை அடையாளம் தெரியாத இருவர் பெல்ட்டால் கழுத்தை இறுக்கிக் கட்டிப்போட்டு, சுமார் 800 கிராம் தங்கக் காசுகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நகைக்கடையில் துணிகரம்: உரிமையாளரை பெல்ட்டால் கட்டிப்போட்டு கொள்ளை!
Venture at a Chennai jewelry store
சென்னை யானைக்கவுனி பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில், உரிமையாளரை அடையாளம் தெரியாத இருவர் பெல்ட்டால் கழுத்தை இறுக்கிக் கட்டிப்போட்டு, சுமார் 800 கிராம் தங்கக் காசுகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்கள் சிசிடிவி-யை உடைத்து DVR கருவியையும் தூக்கிச் சென்றதால், குற்றவாளிகளைத் தேடும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

சம்பவம் நடந்த விதம்

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவர், சென்னை ஏழுகிணறு, நாட்டுப் பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வருகிறார். இவர் யானைகவுனி வெங்கட்ராயன் தெருவில் தங்க நகைக்கடை மற்றும் பட்டறை நடத்தி வருகிறார். நேற்று (நவ. 24) இவரது கடைக்குத் தங்க நகை வாங்குவது போல அடையாளம் தெரியாத இரண்டு பேர் வந்துள்ளனர். அப்போது, திடீரென அவர்கள் ஜெகதீஷின் கழுத்தைப் பெல்ட்டால் இறுக்கி, பீர் பாட்டிலால் தாக்கி உள்ளனர். தாக்குதலுக்குப் பிறகு பெல்டால் அவரை கட்டிப் போட்ட கொள்ளையர்கள், கடையில் இருந்த சுமார் 800 கிராம் தங்கக் காசுகளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

கொள்ளையர்கள் மேலும் கடையில் இருந்த சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்கியதோடு மட்டுமல்லாமல், அதில் பதிவான காட்சிகளைக் கொண்ட டிவிஆர் (DVR) கருவியை எடுத்துச் சென்றனர்.

காவல்துறையின் விசாரணை மற்றும் தேடுதல் வேட்டை

சிறிது நேரம் கழித்து கடைக்கு வந்த ஜெகதீஷின் சகோதரர் சேத்தன், அவரை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த யானைகவுனி போலீசார், ஜெகதீஷ் அளித்த புகாரின் பேரில் கொள்ளை என்ற சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்து, கொள்ளையர்களின் கைரேகைகளைப் பதிவு செய்துள்ளனர். கொள்ளையர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்துள்ளனர். அதனால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பழைய குற்றவாளிகளின் படங்களை வைத்தும் போலீசார் தேடி வருகின்றனர்.