தமிழ்நாடு

சாலைப் பணியில் விபரீதம்.. ரோடு ரோலர் மோதி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு!

கோயம்பேடு பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ரோடு ரோலர் மோதி மாற்றுத்திறனாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாலைப் பணியில் விபரீதம்.. ரோடு ரோலர் மோதி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு!
Disabled person dies after being hit by road roller
சென்னை, கோயம்பேடு சிவன் கோயில் வடக்கு மாட வீதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ரோடு ரோலர் மோதி மாற்றுத்திறனாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாற்றுத்திறனாளி மீது மோதிய ரோடு ரோலர்

கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் ராஜா (54) என்ற மாற்றுத்திறனாளி, தனது மனைவி சாந்தலட்சுமியுடன் நேற்று (செப்.6) இருசக்கர வாகனத்தில் கோயம்பேடு சிவன் கோவில் வடக்கு மாட வீதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலை போடும் பணியில் ஈடுபட்டு இருந்த ரோடு ரோலர் எதிர்பாராதவிதமாக பாஸ்கர் ராஜா மீது மோதியது.

மாற்றுத்திறனாளி என்பதால் அவரால் உடனடியாக ஓட முடியவில்லை. இதில் ரோடு ரோலர் அவர் உடல் மீது ஏறியது. இதனைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவப் பரிசோதனையில் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர், திருவண்ணாமலையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். சென்னை மாநகராட்சி சார்பில் ஒப்பந்ததாரர் பாலாஜிக்கு சாலை போடும் பணி வழங்கப்பட்டதும், கடந்த இரண்டு நாட்களாக பணி நடைபெற்று வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஒப்பந்ததாரரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.