தமிழ்நாடு

ஆயிரம் விளக்கு vs வியாசர்பாடி.. 'டிராபிக் ரேஸ்' அறிவிப்பால் பரபரப்பு!

சென்னையில் இளைஞர்கள் இன்ஸ்டாகிராம் வழியாக 'டிராபிக் ரேஸ்' என்ற பெயரில் சட்டவிரோத பைக் பந்தயத்திற்கு ஏற்பாடு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயிரம் விளக்கு vs வியாசர்பாடி.. 'டிராபிக் ரேஸ்' அறிவிப்பால் பரபரப்பு!
'Traffic Race' announcement creates stir
சென்னையில் இருசக்கர வாகன சாகசங்கள் மற்றும் சட்டவிரோத ரேஸ்களில் ஈடுபட்டு, அதை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை இளைஞர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். சமீபகாலமாக காவல்துறையின் தீவிர நடவடிக்கைகளால் இன்ஸ்டாகிராம் பதிவுகள் குறைந்திருந்தாலும், இரு தரப்பு இளைஞர்கள் இன்ஸ்டாகிராம் வழியாக மாறி மாறி ரேசுக்கு சவால் விடுக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன.

இந்த நிலையில், இன்று 'டிராபிக் ரேஸ்' என்ற பெயரில் இளைஞர்கள் இருசக்கர வாகன பந்தயத்தை நடத்தப் போவதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரம் விளக்கு மற்றும் வியாசர்பாடி இளைஞர்களுக்கு இடையே இந்த 'டிராபிக் ரேஸ்' போட்டி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் விதிமுறைப்படி, போக்குவரத்து நிறைந்த சாலைகளில் அதிவேகமாக வாகனத்தை இயக்கி குறிப்பிட்ட நேரத்தில் எல்லையைக் கடக்க வேண்டும். 155 சிசி (cc) கொண்ட வாகனத்தை மட்டுமே பயன்படுத்தி, '3 vs 3' என்ற முறையில் இந்த இருசக்கர வாகன பந்தயம் நடைபெறுவதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ரேஸ் இரவு நேரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதன் இடம் மற்றும் நேரம் ரகசியமாக இளைஞர்களுக்கு அனுப்பப்பட்டு பந்தயம் நடத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இதே டீமைச் சேர்ந்த இளைஞர்கள் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டு காவல்துறையிடம் சிக்கிக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

இளைஞர்கள் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.