சென்னை அயனாவரம் சோலை அம்மன் தெருப் பகுதியில் ஒன்பது இருசக்கர வாகனங்கள் எரிந்து விட்டதாக தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதற்கு முன்பாக இருச்சக்கர வாகனங்கள் முழுவதுமாக எரிந்து சேதம் அடைந்துள்ளது.
இது தொடர்பாக அயனாவரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், அப்பகுதியில் போகி பண்டிகை கொண்டாடுவதற்காக நான்கு சிறுவர்கள் இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை எடுத்து சாலையில் போட்டு எரித்தது தெரியவந்தது. மேலும், அச்சிறுவர்கள் பெட்ரோல் ஒயரை மீண்டும் வாகனத்தில் செலுத்தாமல் அப்படியே விட்டுவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதனால், தீயானது அந்த ஒயர் மூலமாக பற்றி எரிந்ததில் ஒன்பது இருசக்கர வாகனங்களும் எரிந்து சேதம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த நான்கு சிறுவர்களிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் அச்சிறுவர்கள் மது போதையில் இது போன்ற செயலில் ஈடுபட்டதாக தெரியவந்தது. இதையடுத்து அயனாவரம் போலீஸார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர்.
மேலும் படிக்க: வெளிநாட்டில் வேலை.. பணத்தை ஏமாந்த மக்கள்.. ஏஜெண்டும் புகார் கொடுத்ததால் பரபரப்பு
தமிழ்நாட்டில் நாளை பொங்கல் திருநாள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை தி.நகர், வண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அதுமட்டுமல்லாமல், சந்தைகளில் காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. இந்நிலையில், போகி தினமான இன்று மக்கள் தங்களது பழைய பொருட்களை தீயிட்டு எரித்ததால் சென்னை முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்து காற்று மாசுபாடு ஏற்பட்டது.
போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை தீயிட்டு எரிக்காமல் குப்பை தொட்டிகளில் போடுமாறு தமிழ்நாடு அரசு சார்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில் பலர் பழைய பொருட்களை தீயிட்டு எரித்ததால் சென்னை புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த சூழலில் சிறுவர்கள் இரு சக்கர வாகனங்களை தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.