கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஜவுளி நிறுவனங்கள் கொடுக்கும் நூலைத் துணியாக நெய்து கொடுத்து அதற்கான கூலியை விசைத்தறி உரிமையாளர்கள் பெற்று வந்தனர். இந்த தொழிலை நம்பி லட்சக் கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். இந்நிலையில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் நீண்ட காலமாக கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜவுளி உற்பத்தியாளர்களுடன் நடந்த முத்தரப்பு பேச்சு வார்த்தையில், 23 சதவீத கூலி உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் இந்த கூலி உயர்வை ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கொடுக்கவில்லை, என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி உரிமையாளர்கள் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தியும் அரசு கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாள் ஒன்றுக்கு ரூபாய் 30 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி தொழிலையே நம்பி உள்ள லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இன்றி வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
நாளுக்கு நாள் உயர்ந்து வரும் விலைவாசிக்கு ஏற்ப நியாயமான கூலி உயர்வு கேட்டு கடந்த 15 மாதங்களாக மாநில, மாவட்ட நிர்வாகிகளிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருவதாகவும், அதனைத் தொடர்ந்து அவர்கள் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், கருப்பு கொடியேற்றி போராட்டம் என நடத்தினார்கள். ஆனால் அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் பின்பும் கூட கூலி உயர்வு குறித்து பேச்சுவார்த்தையில், ஜவுளி உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமல் . பல கட்ட போராட்டத்திற்கு பிறகும் கூலி உயர்வு குறித்து எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் கடந்த மாதம் 19 ஆம் தேதி முதல் விசைத்தறி தொழிலையும், தொழிற்சார்ந்தவர்களையும் காக்க வேறு வழியின்றி விசைத்தறிகளை நிறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலை நிறுத்த போராட்டத்தால், நாள்தோறும் ரூபாய் 30 கோடி வரை உற்பத்தி இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியாளர்கள் இரண்டு முறை ஜவுளி உற்பத்தியாளர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர். ஆனால் கூலி உயர்வு குறித்து எந்த முடிவும் இதுவரை எட்டப்படவில்லை, இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜி, கணபதி ராஜ்குமார் எம்.பி நேரில் சந்தித்து நடைமுறை சிக்கலை எடுத்துக் கூறி அவர்கள் வாழ்வாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காணவும் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
தொடர்ந்து விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி தொழிலும் தொழிற்சார்ந்த பிற தொழில்களும் அதை நம்பி உள்ள தொழிலாளர்களுக்கும் வருமானமின்றி கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். வேறு தொழிலுக்கு செல்ல முடியாமலும், மாற்றுத் தொழிலுக்கு வழியில்லாமலும், வாழ்வாதாரத்தை இழந்து விசைத்தறி தொழிலாளர்கள் தவிர்த்து வருகின்றனர். வாழ்வாதாரத்துக்கே போராடும் நிலை விசைத்தறி தொழிலாளர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். எனவே கூலி உயர்வு பிரச்சனைகளை விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என இரு மாவட்டங்களைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தமிழ்நாடு
தொடரும் வேலை நிறுத்தம்.. வாழ்வாதாரத்திற்காக போராடும் விசைத்தறி தொழிலாளர்கள்!
விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாள் ஒன்றுக்கு ரூபாய் 30 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விசைத்தறி தொழிலையே நம்பி உள்ள லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இன்றி வாழ்வாதாரத்திற்காக போரடுகின்றனர்.