தமிழ்நாடு

குருவிகளுக்காக பைக்கை தானம் செய்த வினோத இளைஞன்

அலுவலகத்திற்கு செல்லும் பைக்கில் குருவி கூடு கட்டியிருப்பதை அறிந்து பைக்கை பயன்படுத்தாமல் குருவி குஞ்சு பறக்கும் வரை காத்திருக்கும் வினோத இளைஞரின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குருவிகளுக்காக பைக்கை தானம் செய்த வினோத இளைஞன்
strange young man donated his bike to the birds at Thanjavur
தஞ்சாவூர் கீழவாசல் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சித்திக் பாஷா. இவர் தஞ்சை ரகுமான் நகரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் டெவலப்பர் ஆக பணியாற்றி வருகிறார். 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அலுவலகத்திற்கு தினமும் ஸ்கூட்டியில் சென்று வருகிறார்.

வழக்கம் போல தனது ஸ்கூட்டரை அலுவலகத்தின் பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு வேலையை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தை நகர்த்தும் போது முன்பகுதியில் குருவி கூடு கட்டி இருப்பது தெரிய வந்தது. குஞ்சு பொரிப்பதற்காக தான் கூடு கட்டியிருக்கும் என அறிந்த இவர், குருவிகளை தொந்தரவு செய்யாமல் தனது வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டு பேருந்தில் பயணம் செய்து வருகிறார். தற்போது மூன்று முட்டைகளில் இருந்து மூன்று குஞ்சுகள் வெளிவந்து மூன்று குருவிகளும் பாதுகாப்பாக ஸ்கூட்டியில் தங்கி உள்ளது.

அந்த குஞ்சுகள் பறக்க ஒரு வார காலம் ஆகும் என கூறும் இளைஞர் கடந்த ஒரு வாரமாக தற்போது வரை அலுவலகத்திற்கு வரும்போது தண்ணீர் வைத்து குருவிகளை பாதுகாத்து வருகிறார்.‌

இது குறித்து இளைஞர் கூறுகையில் "பறவைகள் விலங்குகள் மேல் எனக்கு பற்று அதிகம். கொரோனா காலத்தில் ஏற்கனவே இதுபோன்று சம்பவம் எதர்ச்சியாக எனது ஸ்கூட்டரில் இரண்டு முறை நடந்துள்ளது. அப்போதும் இதைத்தான் செய்தேன். இது எல்லோரும் செய்ய வேண்டிய ஒரு செயல் என்று நினைக்கிறேன்.‌

வெயில் காலங்களில் மட்டுமில்லாமல் எப்போதும் பறவைகளுக்கு ஏதாவது ஒரு இடத்தில் தண்ணீர், தானியங்கள், பறவைகளுக்கு ஏற்ற உணவுகளை கொஞ்சம் வைப்பது அவசியம். நமக்கு வாழ்க்கையில் அது செய்ய வேண்டும்.. இது செய்ய வேண்டும் என்ற ஆசை, தேவைகள் இருக்கும். ஆனால் பறவைகள் எதிர்பார்ப்பது உயிர்வாழ தேவயான
உணவு, தண்ணீர் மட்டும்தான். அவற்றை அறிந்து நாம் எல்லோரும் செய்யும் சிறு உதவி நாளை பல உயிர்களை காக்கும்” என்று இளைஞர் கூறினார்.