தமிழ்நாடு

வாய் புண்ணுக்கு சுன்னத் சிகிச்சை.. ஞாபக மறதியால் சர்சையில் சிக்கிய டாக்டர்

வாய் புண்ணுக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவனுக்கு சுன்னத் சிகிச்சையினை மருத்துவர் மேற்கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

வாய் புண்ணுக்கு சுன்னத் சிகிச்சை.. ஞாபக மறதியால் சர்சையில் சிக்கிய டாக்டர்
sunnath treatment for mouth ulcers-Doctor caught in controversy due to amnesia
சென்னை மயிலாப்பூர் சிட்டி சென்டர் பின்புறம் உள்ள மீனாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்த விஜய் ஆனந்த் - விஜயலட்சுமி தம்பதியினரின் 9 வயது மகன் ஜெயவர்தன். சிறுவனுக்கு கடந்த ஒரு வார காலமாக வாய் பகுதியில் சிறிய அளவிலான கட்டி ஒன்று உருவாகி வலியை ஏற்படுத்தி வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 22 ஆம் தேதி மாலை ஐஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுவனை அவனது பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர்.

மாற்று அறுவைச்சிகிச்சை:

முகமது உவைசி என்ற மருத்துவர் வாய் பகுதியை சோதனை செய்துவிட்டு சனிக்கிழமை(24- ம் தேதி) மாலை அறுவை சிகிச்சை செய்து கட்டியைச் அகற்றி விடலாம் என தெரிவித்ததாக, கூறப்படுகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை மாலை சிறுவனை அவனது பெற்றோர் மருத்துவமனைக்கு மீண்டும் அழைத்துச் சென்றுள்ளனர். வாய்ப்பகுதியில் ஏற்பட்ட கட்டியை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை அறைக்கு சிறுவனை அழைத்துச் சென்ற நிலையில், சுமார் ஒரு மணி நேரம் கழித்து சிறுவன் நடக்க முடியாதபடி இடுப்பில் துண்டைக்கட்டி அழைத்து வரப்பட்டுள்ளார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் சிறுவனின் துண்டை அவிழ்த்து பார்த்த போது சிறுவனுக்கு "சுன்னத்" சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, சுன்னத் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் முகமது உவைசியிடம் கேட்டபோது, சரியான முறையில் பதில் அளிக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

காவல் நிலையத்தில் புகார்:

பின்னர், சிறுவனின் பெற்றோர் அவர்களது உறவினர்களை வரவழைத்து மருத்துவமனை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட, பின் ஐஸ் ஹவுஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படிக் கூறி அனைவரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.

இதனையடுத்து சிறுவனை மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரது பெற்றோர் அனுமதித்தனர். பின் ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில், "வாய்ப்புண் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட தனது மகனுக்கு சுன்னத் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் முகமது உவைசி மற்றும் மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகார் அளித்தனர். புகாரின் பேரில், ஐஸ் ஹவுஸ் போலீசார் தனியார் மருத்துவமனை மருத்துவரான முகமது உவைசியை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து சுகாதாரத்துறை இணை ஆணையர் லட்சுமி தலைமையிலான அதிகாரிகள், மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணையில் ஈடுபட்டனர்.

ஞாபகமறதியால் வந்த வினை:

இந்த நிலையில் சிறுவனின் தாய் மாமா திலீபன் நமக்களித்த பேட்டியில், வாய்ப்புண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தனது தங்கையின் மகனுக்கு மருத்துவர் சுன்னத் சிகிச்சை செய்துள்ளதாகவும், இது குறித்து மருத்துவரிடம் நாங்கள் கேட்டபோது ஞாபக மறதியாக சுன்னத் செய்து விட்டதாக தங்களிடம் மருத்துவர் உவைசி கூறியதாக திலீபன் தெரிவித்துள்ளார்.

அஜாக்கிரதையாக செயல்பட்ட மருத்துவர் முகமது உவைசி மற்றும் மருத்துவமனை நிர்வாகம் மீது காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை சென்று, மருத்துவமனை தரப்பு விளக்கத்தை கேட்டபோது தற்சமயம் தர இயலாது என கூறினர். இந்தச் சம்பவம் குறித்து ஐஸ் ஹவுஸ் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

சுகாதாரத்துறை இணை ஆணையர் மீனாட்சி தலைமையிலான அதிகாரிகள் மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் ஆபரேஷன் தியேட்டர் மற்றும் ஆய்வகத்தை மறு உத்தரவு வரும் வரை மூட உத்தரவிட்டுள்ளனர்.