தமிழ்நாடு

முன்பதிவு செய்தும் ரயில் நிலையத்தில் ஓய்வறை வழங்க மறுப்பு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ரயில் நிலைய ஓய்வறைக்கு முன்பதிவு செய்திருந்தும் அறை ஒதுக்க மறுத்ததால் நடைமேடையில் தங்கி அவதிக்குள்ளான இருவருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முன்பதிவு செய்தும் ரயில் நிலையத்தில் ஓய்வறை வழங்க மறுப்பு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த லட்சுமணன், கடலூர் பெரியகுப்பம் பெட்டோடையைச் சேர்ந்த ராமு என்பவரும் கடந்த  2019-ம் ஆண்டு  டெல்லி, ஆக்ரா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது, டெல்லி நிஜாமுதீன், அமிர்தசரஸ், சண்டிகர் ஆகிய மூன்று ரயில் நிலையங்களில் உள்ள ஓய்வறைகளில் தங்கி கொள்வதற்காக முன்பதிவு செய்துள்ளனர்.

குறிப்பிட்ட தேதியில் நிஜாமுதீன் ரயில் நிலையம் சென்று ஓய்வறையை ஒதுக்கி தரும்படி கேட்டபோது ஓய்வறை முன்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக கணினியில் எந்த பதிவும் காண்பிக்கவில்லை எனக் கூறி ரயில்வே நிலைய பணியாளர், அறை ஒதுக்க மறுத்துள்ளார்.  இதனால்  இருவரும் ரயில் நிலைய நடைமேடையில்  படுத்து ஓய்வெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ஓய்வறைக்கு முன்பதிவு செய்தும் அதை வழங்காமல் ரயில் நிலைய நடைமேடையில் ஓய்வெடுத்ததால் கவலை அடைந்த இருவரும் இழப்பீடு வழங்க ரயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த   ஆணையம் அடுத்தகட்ட ரயில் பயணத்தை எளிதாக மேற்கொள்வதற்கு வசதியாகவே ரயில் நிலைய ஓய்வறையை பயணிகள் தேர்ந்தெடுக்கின்றனர்.  

ஓய்வறைக்கு முன்கூட்டியே பதிவு செய்திருந்த நிலையில்  அறை ஒதுக்கப்படாதது ரயில்வே நிர்வாகத்தின்  சேவை குறைபாடு என்றும் இந்த செயல் மனுதாரர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி இருப்பதால் தெற்கு ரெயில்வே சென்னை கோட்ட பொது மேலாளர் இழப்பீடாக 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும், வழக்கு செலவுக்காக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக கழிவறைகளுடன் கூடிய ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தனியாக கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இதில் குளிர் சாதன ஓய்வறையும் அடங்கும். நீண்ட பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் தங்கள் வசதிக்காக இந்த ஓய்வறைகளை முன்கூட்டியே முன்பதிவு செய்து தங்கி வருகின்றனர். சில ரயில் நிலையங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணிகளுக்கு முன்பதிவு செய்த ஓய்வறைகள் வழங்கப்படுவது இல்லை என்று கூறப்படுகிறது.