தமிழ்நாடு

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை.. தமிழக அரசுக்கு அண்ணா தொழிற்சங்கம் கெடு

பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்காவிட்டால் வரும் 26-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடுவோம் என அண்ணா தொழிற்சங்கப் பேரவை உட்பட 28 சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை.. தமிழக அரசுக்கு அண்ணா தொழிற்சங்கம் கெடு

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சு வார்த்தையை வரும் 10-ஆம் தேதிக்குள் தொடங்காவிட்டால்  வரும் 26-ஆம் தேதி  முதல் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அண்ணா தொழிற்சங்கப் பேரவை உட்பட 28 சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை செயலாளர் பணீந்திர ரெட்டியை சந்தித்து தொழிற்சங்க ஊழியர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர் கமலக்கண்ணன் பேசியதாவது, வரும் 10-ம் தேதிக்குள் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் இல்லை என்றால் வரும் 10-ம் தேதி  வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்குவோம். அடுத்த 15 நாட்களில் அனைத்து  போக்குவரத்து தொழிற்சங்கத்தினரையும் இணைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். 

அதன்படி, பிப்ரவரி 26-ஆம் தேதி  முதல் தமிழகம் முழுவதும் பேருந்துகளை இயக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். தமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓடாத சூழ்நிலை உருவாகும். சென்னையில் தனியார் மினி பேருந்துகளை அனுமதிக்க கூடாது. மினி பேருந்துகளை அரசே இயக்க வேண்டும். தனியார் தரப்பில் மினி பேருந்துகளை இயக்கினால் லாபம் வரும் நேரங்களில் மட்டும்தான் பேருந்தை ஓட்டுவர். 

அதிகாலை வேளையில் குறைவான பயணிகளே வருவர் என்பதால் தனியார் உரிமையாளர்கள் ஆம்னி பேருந்துகளை அதிகாலையில் இயக்கமாட்டார்கள். எனவே பயணிகள் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே கடந்த ஆட்சியில் இயக்கப்பட்ட மினி பேருந்துகளை பழுது நீக்கி அரசே இயக்க வேண்டும். பேருந்து போக்குவரத்து சேவைத்துறை லாபம்,  நஷ்டம் பார்க்காமல் இயக்க வேண்டுமென்றால் அரசே ஏற்று நடத்திதான் ஆக வேண்டும்.

ஓட்டுநர், நடத்துநர்களை ஒப்பந்த அடிப்படையில் இல்லாமல் நிரந்தர அடிப்படையில் நியமிக்க வேண்டும். சமூக நீதி பேசும் திமுக  அரசு தொழிற்சங்கத்தினரை இரண்டு பிரிவாக பிரித்து ஊதிய ஒப்பந்த  பேச்சுவார்த்தையை நடத்த முற்படுவது ஏன்..? ஆயிரம் பேருந்துகளை வாங்குவதாக சொன்ன அரசு 700 பேருந்துகளை மட்டுமே வாங்கியுள்ளது. போக்குவரத்துத் துறையை திமுக அரசு தனியார் மயாமாக்கி வருவதாக சந்தேகம் எழுந்துள்ளது என்று கூறினார்.