தமிழ்நாடு

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நடைமுறைப்படி நிரப்பப்படும்: சபாநாயகர் அப்பாவு!

திருநெல்வேலியில் பேசிய சபாநாயகர் அப்பாவு, நதிநீர் இணைப்புத் திட்டத்தின் அடிப்படை விவரங்களைப் படிக்காமல் அதிமுக எம்.பி.க்கள் விமர்சிப்பதாக ஆவேசமாகக் குற்றம் சாட்டினார்.

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நடைமுறைப்படி நிரப்பப்படும்: சபாநாயகர் அப்பாவு!
ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நடைமுறைப்படி நிரப்பப்படும்: சபாநாயகர் அப்பாவு
அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் உரிய அரசு நடைமுறைகளைப் பின்பற்றி நிரப்பப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

கல்லூரி மாணவிகளுக்கான முதலமைச்சர் கோப்பை ஹாக்கிப் போட்டியைத் தொடங்கி வைத்த பின்னர் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது,

தமிழ்நாடு விளையாட்டுத் துறையில் முன்னணியில் இருப்பது பெருமைக்குரியது. முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் எனச் சுமார் 7 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். இன்று கல்லூரி மாணவிகளுக்கான ஹாக்கி போட்டி ரூ.40 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட அண்ணா விளையாட்டு மைதானத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆறு மற்றும் நதிநீர் இணைப்புத் திட்டம்

தாமிரபரணி ஆற்றைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாகக் கூறுவது தவறானது என்று சபாநாயகர் மறுத்தார்.
"தாமிரபரணி ஒரு ஜீவநதி, அது நன்றாகத்தான் இருக்கிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் வரை பல மாவட்ட மக்களின் தாகத்தைத் தீர்ப்பதும், விவசாயத்திற்கு வாழ்வளிப்பதும் தாமிரபரணிதான்.

அதிமுக எம்.பி. குற்றச்சாட்டுக்கு மறுப்பு:

நதிநீர் இணைப்புத் திட்டம் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என்று அ.தி.மு.க. எம்.பி. ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்தத் திட்டம் எப்படிச் செயல்படுகிறது, எந்தத் தண்ணீர் எடுக்கப்படுகிறது என்பதை அவர் முதலில் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். மணிமுத்தாறு, பாபநாசம் அணைகள் நிரம்பி, தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீணாகக் கடலில் கலக்கும் உபரி நீரை மட்டுமே எடுத்து நாங்குநேரி, ராதாபுரம், சாத்தான்குளம் போன்ற பகுதிகளுக்குக் கொண்டு செல்லும் மகத்தான திட்டம் இது. இதைப்பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு பேச வேண்டும்.

ஆசிரியர் காலிப்பணியிடங்கள்:

கல்வித்துறையில் ஒரு லட்சம் பேர் பணியாற்றும் இடத்தில் 9 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருப்பது பெரிய எண்ணிக்கை அல்ல என்று அவர் தெரிவித்தார். ஒருவர் ஓய்வு பெற்றவுடன் உடனடியாக அடுத்தவரை நியமிக்க முடியாது. அதற்குச் சில அரசு நடைமுறைகள் உள்ளன. டி.என்.பி.எஸ்.சி., டி.ஆர்.பி. மூலமாகவே நிரந்தர நியமனங்கள் செய்ய முடியும். அதுவரை மாணவர்களின் படிப்பு பாதிக்காத வகையில், பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் சங்கம் மூலமாகவும், கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் மூலமாகவும் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டுப் பாடம் நடத்தப்படுகிறது. நிரந்தரப் பணியிடங்கள் உரிய நேரத்தில் நிச்சயம் நிரப்பப்படும்.