தமிழ்நாடு

மகளிர் உரிமைத் தொகை.. பெண்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை.. பெண்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தமிழ்நாடு அரசு
இந்த மாதம் மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கியுள்ளது

தமிழ்நாட்டில் திமுக அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதியுடைய பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. இத்திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஒரு கோடியே 63 லட்சத்து 57 ஆயிரத்து 195 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றை ஆய்வு செய்ததில் 70 சதவீதம் அதாவது 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரத்து 198 விண்ணப்பங்கள் முதல் கட்டமாக ஏற்கப்பட்டன.

முதல் முறை விண்ணப்பித்து, நிராகரிக்கப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, கூடுதலாக 9 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி நிலவரப்படி ஒரு கோடியே 14 லட்சத்து 65 ஆயிரத்து 525 மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையானது உரிமைத் தொகை பெறும் பெண்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்பட்டு வருகிறது. 

ஒவ்வொரு மாதமும் 14-ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் நிலையில் இந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  1 கோடியே 14 லட்சத்து 65 ஆயிரத்து 525 மகளிருக்கு முன்கூட்டியே மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. இதனால் பெண்கள் உற்சகாத்தில் உள்ளனர்.

பொங்கள் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் பொங்கள் பரிசுத் தொகுப்பு இன்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படவுள்ளது. இதற்கான டோக்கனை சமீபத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று வழங்கினர். பொங்கல் பண்டிகையின் போது ஒவ்வொரு ரேஷன் அட்டைதார்களுக்கும் ஆயிரம் ரூபாய் தமிழ்நாடு அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும்.

ஆனால், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ஆயிரம் ரூபாய் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால், மக்கள் கவலையடைந்த நிலையில் அதனை ஈடு செய்வதற்காக மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.