தமிழ்நாடு

இந்தியாவிலேயே தமிழக காவல்துறை தான்  சிறப்பாக செயல்படுகிறது - டிஜிபி சங்கர் ஜிவால்

போதைப் பொருளை தடுக்கும் பணியில் இந்தியாவிலேயே தமிழக காவல்துறை தான்  சிறப்பாக செயல்படுகிறது என்று டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். 

இந்தியாவிலேயே தமிழக காவல்துறை தான்  சிறப்பாக செயல்படுகிறது - டிஜிபி சங்கர் ஜிவால்
இந்தியாவிலேயே தமிழக காவல்துறை தான்  சிறப்பாக செயல்படுகிறது - டிஜிபி சங்கர் ஜிவால்

தமிழக காவல்துறையின் அமலாக்கப்பிரிவு சார்பாக போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு குறும்படம் போட்டி சென்னையில் உள்ள 16 கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்று முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் இரண்டாம் பரிசாக 50,000 மூன்றாம் பரிசாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் இதில் பங்கேற்ற 23 மாணவர்களுக்கு தலா பத்தாயிரம் மற்றும் பாராட்டு சான்றுகளை  தமிழக காவல் தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் வழங்கி சிறப்பித்தார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி அமல்ராஜ் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்று டிஜிபி சங்கர் ஜிவால் பேசினார்.

சென்னை உள்ள பல கல்லூரிகளில் இருந்து போதை பொருள் தடுப்பு குறித்ததான விழிப்புணர்வு காணொளியை உருவாக்கிய அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

போதைப் பொருட்களை காவல்துறை தடுப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் உள்ள காவல் துறை தான் போதைப்பொருள் தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. போதை குறித்து தான் விழிப்புணர்வு மிக முக்கியமானது, பள்ளி மாணவர்களில் இருந்து பெரியோர்கள் வரை இது போன்ற விழிப்புணர்வுகள்  சேர வேண்டும்.

அனைத்து கல்லூரிகளிலும் ஆன்ட்டி டிரக் கிளப் என்ற அமைப்பை ஆரம்பித்துள்ளோம். இதன் மூலமாக அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இப்படி செய்வதால் இதை தடுக்க முடியும் என்று நம்புகிறேன். அடுத்த கட்டமாக அனைத்து மாவட்டங்களில் இதை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

போதைப்பொருளை தடுக்க நாங்கள் பல்வேறு வகையில்  முயற்சி எடுத்து வருகிறோம். அதேபோன்று நீங்களும் அதை உணர்ந்து நடந்து கொண்டால் நிச்சயமாக இதை தடுக்க முடியும், என்று டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.