தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவை கூட்டம்: ஆளுநர் வெளியேறியது அவமதிக்கும் செயல்- முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!

ஆளுநர் வெளியேறியது அவமதிக்கும் செயல் என முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம்: ஆளுநர் வெளியேறியது அவமதிக்கும் செயல்- முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!
CM Stalin
தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையை வாசிக்காமல் வெளியேறிது பேரவையை அவமதிக்கும் செயல் என முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கிடையில், பேரவையில் இருந்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

ஆளுநரின் செயல் பதவிக்கு அழகல்ல - முதல்வர் கண்டனம்

அவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. அவர் வேண்டுமென்றே அரசமைப்புச் சட்டத்தை மீறியுள்ளார். 100 ஆண்டு கால மரபையும், நீண்ட பாரம்பரியத்தையும் கொண்ட இந்த மக்கள் சபையை ஆளுநர் அவமதித்துள்ளார். ஆளுநர் என்பவர் மாநில நலனில் அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும். ஆனால், அவர் பொது மேடைகளில் அவதூறு பேசி வருகிறார்" என்று மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அண்ணா சொன்ன வரிகளை நினைவுகூர்ந்த முதல்வர்

பேரறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற பொன்மொழியான "ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை" என்ற வரிகளை மேற்கோள் காட்டிய முதல்வர், ஆளுநர் ஏற்கனவே இதேபோல் நடந்துகொண்டதைச் சுட்டிக்காட்டி தனது வருத்தத்தைப் பதிவு செய்தார். மேலும், ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறினாலும், அந்த உரை சபையில் வாசிக்கப்பட்டதாகவே கருதப்படும் என்றும், ஆளுநர் உரை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும், அவரின் வெளிநடப்பு குறித்த குறிப்புகள் இடம்பெறாது என்றும் அவர் தெரிவித்தார்.

அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம்

தொடர்ந்து பேசிய அவர், "ஆண்டு தொடக்கத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறையில் திருத்தம் செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும். ஆளுநர் உரையை விலக்கும் நடைமுறையை கொண்டு வர அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியா முழுவதும் இந்த நடைமுறையை அமலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்." என்று அவர் தெரிவித்தார்.

அதிமுக, பாஜக மற்றும் பாமக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

இதற்கிடையில் திமுகவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக மற்றும் பாஜக உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து, அன்புமணி ராமதாஸ் ஆதரவு பாமக எம்.எல்.ஏக்கள் மூவரும் சட்டசபை ஒழுங்குப் பிரச்னையைச் சுட்டிக்காட்டி, ஆளுநருக்கு ஆதரவாக அவையிலிருந்து வெளியேறினர்.